சென்னையில் இருந்து விமானத்தில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பதுக்கி வைத்திருந்த, பல கோடி ரூபாய் மதிப்புடைய யானை தந்தங்களை, சென்னை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
சென்னை ( Chennai News ) : சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை எனப்படும், டி. ஆர்.ஐ க்கு ரகசிய தகவல் ஒன்று, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிடைத்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில், வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக சிலர், யானை தந்தங்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்தது. இதை அடுத்து டி.ஆர்.ஐ தனிப்படை பிரிவினர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் விரைந்து சென்றனர்.
பிடிபட்ட யானை தந்தங்கள்
அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டதில் ,2 யானை தந்தங்களுடன், ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 3 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த இரண்டு யானை தந்தங்களையும் பறிமுதல் செய்தனர். யானைத் தந்தங்களின் எடை 21.63 கிலோ. அந்த யானைத் தந்தங்கள், பல கோடி ரூபாய் மதிப்புடையது என்று கூறப்படுகிறது.
பல கோடி ரூபாய்க்கு விற்பனை
இதை அடுத்து மூன்று பேரிடமும் டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த யானைத் தந்தங்களை, மர்ம ஆசாமிகள் சிலர் கடத்திக் கொண்டு வந்து, தங்களிடம் கொடுத்ததாகவும், அவர்கள் இதை சென்னைக்கு கொண்டு வந்து, விமானத்தில் வெளிநாட்டிற்கு கடத்திச் சென்று, பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருந்ததாகவும் கூறினர்.
தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்
இதை அடுத்து மூன்று பேரையும், வனவிலங்குகள் பாதுகாப்பு திட்டத்தின்படி கைது செய்தனர். அதோடு அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கும், இந்த யானைத் தந்தங்களை இவர்களிடம் கொடுத்த ஆசாமிகளை பிடிப்பதற்காகவும், கைது செய்யப்பட்ட மூன்று பேரையும், தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
4 கிலோ எடையுடைய யானை தந்தத்தை கண்டுபிடித்து
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், சென்னை புறநகரில், சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, 4 கிலோ எடையுடைய யானை தந்தத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அது சம்பந்தமாக ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த யானைத் தந்தமும் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக, தென் மாவட்டத்திலிருந்து எடுத்து வரப்பட்டது என்று தெரிய வந்தது.
தீவிர நடவடிக்கை
யானைத் தந்தங்கள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், அதை தடுப்பதற்கு மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டு விட்டால் அதன்பின்பு, அந்த யானை தந்தங்களை மீட்டு, இந்தியாவுக்கு கொண்டு வருவதில், பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும், எனவே யானை தந்தங்கள், வெளிநாட்டிற்கு எடுத்து செல்வதற்கு முன்பதாகவே, தீவிர நடவடிக்கை எடுத்து, தடுத்து வருகிறோம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.