கலர் கலரா லைட்டை பார்த்தவுடனே, 80 வயசு ஆனாலும்,  குழந்தைங்க மாதிரி நம்ம மனசுல ஒரு சிரிப்பு வந்துடும்.  அதையும் பெரிய பெரிய கோவில், ஓட்டல், மால்கள், அந்த மாதிரி எடத்துல, செட் பண்ணி இருக்கிற லைட்டை பார்த்தால், அவ்வளவு அழகா இருக்கும். நமக்கும் நம்ம வீட்டில அந்த மாதிரி லைட் செட் போடணும், எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும். அந்த மாதிரி அழகான லைட்டை வாங்க, கடைக்கு போனா அதோடு விலை நம்மை மலைக்க வைக்கும். 




விலையை கேட்டவுடன், அட போப்பா நமக்கு இந்த அலங்கார விளக்கே ,  வேண்டாம்னு சொல்ற அளவுக்கு தான் இருக்கும். நாமும் இந்த மாதிரி அழகா இருக்குற விலை குறைந்த விலைக்கு வாங்க முடியுமான்னு, பலமுறை யோசித்திருப்போம். உங்களுக்கு அந்த மாதிரி ஆசை இருக்குன்னா , கண்டிப்பா அதுக்கு ஏத்த மாதிரியான இடம், ஒன்று சென்னையில் இருக்கு. அதுவும் நம்ம பல்லாவரம், சுற்றுவட்டாரப் பகுதியில் தான் இந்த கடை இருக்கு. 



பல்லாவரம்  சாலையோரத்தில் கலர்ஃபுல்லா பல வடிவத்தில் அலங்கார விளக்குகள் தொங்கிட்டு இருந்துச்சு, உடனே கடை நடத்தும் உரிமையாளரிடம், என்ன விலைன்னு கேட்டோம். அவங்க 250 ரூபாயில் இருந்து , அலங்கார விளக்குகள் கிடைக்கும்னு சொன்னாங்க, ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. இந்த கடையில வட்டம் , ஆர்டின், உருளை, பூஜை அறையில் வைப்பதற்கு ஏற்றவாறு கடவுள் புகைப்படங்கள், ஸ்டார் உள்ளிட்ட வடிவங்களில் அலங்கார விளக்குகள் கிடைக்கின்றன.





இதுகுறித்து கடை உரிமையாளர் நாகமுத்துவிடம் கேட்டபோது, ”நான் MA  வரலாறு மற்றும்  b.ed படித்து முடித்துள்ளேன். சரியாக வேலை கிடைக்காததால், என்ன செய்வதென்று தெரியாமல், யோசித்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் தான் நண்பர் ஒருவர் மூலம், குறைந்த விலையில் அலங்கார விளக்குகள் செய்வதற்கான அறிமுகம் கிடைத்தது.  கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இந்த அலங்கார விளக்குகளை வியாபாரம் செய்து வருகிறேன்.


 




இந்த விளக்குகளை செய்வதற்கான மூலப்பொருட்கள் டெல்லி, குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். குறைந்த விலையில் பொதுமக்களுக்கு, அலங்காரம் விளக்குகளை விற்பனை செய்து வருகிறோம். 250 முதல் 550 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றோம். தெருவோரக் கடை என்பதால் அடிக்கடி இடத்தை மாற்றி கொண்டு இருப்போம், பல்லாவரம், பம்மல், குன்றத்தூர், பூந்தமல்லி சேலையூர் ஆகிய பகுதிகளில் இடத்தை மாற்றி மாற்றி வியாபாரம் செய்து வருகிறோம். சிறு சிறு வணிக வளாகங்கள் வைத்திருப்பவர்கள் , அதிக அளவு இந்த அலங்கார விளக்குகளை வாங்கி கொண்டு செல்வதாக தெரிவித்தார் .