சென்னையில் விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின்  குடும்பத்திற்க்கு முதலமைச்சர் ரூபாய் மூன்று இலட்சம்  நிவாரணம் அளித்துள்ளார்.


இது குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 


சென்னை, ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரங்கல் மற்றும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். அதாவது போக்குவரத்து கழக நிதியில் இருந்து ரூபாய் ஒரு லட்சமும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் இரண்டு லட்சமும் என மொத்தம் மூன்று லட்ச ரூபாயினை நிவாரணமாக  அளிக்க முதலமைசரின் ஆணையின் படி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், விபத்தில் இறந்த சண்முக சுந்தரம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். 


 






நேற்று, சென்னை கத்திப்பாரா அருகே ராட்சத வழிகாட்டி பலகை  கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். சாலையோரத்தில் இருந்த வழிகாட்டி பலகை திடீரென சாலையில் சரிந்துவிழந்ததில் சாலையில் பைக்கில் சென்ற நபர் படுகாயம் அடைந்தார். பேருந்து ஒன்றும் பலமாக சேதமடைந்தது.  இதில் இருவர் படுகாயமடைந்தனர். 


இந்த விபத்தால் கத்திப்பாரா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட உடனேயே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அதேபோல் நடுரோட்டில்கிடந்த பலகையை கிரேன் உதவியுடன் நகர்த்தி சாலையை போக்குவரத்தை சரி செய்தனர்.


இது குறித்து தெரிவித்துள்ள போக்குவரத்து காவலர்கள்,'' மாநகரப்பேருந்து மோதிய வேகத்தில்தான் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்தது. இரு புறம் சாலையில் செல்லும் வாகனங்களும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டன என்றனர்.


முன்னதாக சென்னையில் 2019ம் ஆண்டு பேனர் விழுந்து சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்தார். துரைப்பாக்கம்-பல்லாவரம் சாலையில் அப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸை வரவேற்று வைக்கப்பட்ட டிஜிட்டர்பேனர் சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்பவர் மீது விழுந்தது. சரியாக கட்டப்படாத அந்த பேனர் விழுந்ததில் தடுமாறி விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் சுபஸ்ரீ உயிரிழந்தார். சிசிடிவியில்  பதிவான இந்தக்காட்சி அப்போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண