குறைவான கட்டமைப்பு வசதிகள் காரணமாக இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் 18 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.


மாநிலம் முழுவதும் 440-க்கும் மேற்பட்ட இணைப்பு பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவை செயல்பட, ஆண்டுக்கு ஒருமுறை இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம் ஆகும். 


இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உயர்மட்டக் குழு கடந்த மே - ஜூன் மாதங்களில் ஆய்வு மேற்கொண்டது. இதில், 200-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் தரம் குறைந்ததாக இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், போதிய உட்கட்டமைப்பு வசதிகளில் 50 சதவீதப் பற்றாக்குறையோடு 225 பொறியியல் கல்லூரிகள் இருந்தன.


குறிப்பாக, 62 பொறியியல் கல்லூரிகளில் 25 - 50% பற்றாக்குறை இருந்தது. அதேபோல 23 பொறியியல் கல்லூரிகளில் முதல்வர்களின் தகுதி குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. 166 கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதி போதாமை இருந்தது. இதில் 225 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியது. 




அவற்றைச் சரிசெய்துகொள்ள மேலே குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒரு மாத கால அவகாசம் வழங்கியது. குறிப்பாக ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை உயர்த்துமாறு உத்தரவு பிறப்பித்தது. அந்த அறிக்கையை ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்கவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியது. 


எனினும் இதில் 18 கல்லூரிகள் ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தவில்லை. இந்த போதாமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது. இதையடுத்து தரமற்ற 18 பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா கால கற்றல் இழப்பு, ஆன்லைன் வகுப்புகள் காரணமாக மாணவர்களின் கற்றல் விகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள், விரைவில் கற்றல் இழப்பு சரிசெய்யப்படும் என்று தெரிவித்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண