சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பச்சை, நீல வழித்தடங்களில் ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இது மக்களின் போக்குவரத்து நெரிசல் இல்லா பயணத்துக்கு வழிவகுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து , சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டருக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில்களின் வருகையால் , தினசரி பணிக்கு செல்வோர்களுக்கும் , கல்லூரி , மருத்துவமனை , உள்ளிட்ட ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிகளுக்கு , எந்த வித போக்குவரத்து நெரிசல்கள் இல்லாமல் உடனடியாக செல்ல இந்த மெட்ரோ ரயில்கள் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருவதை காண முடிகிறது.
கூடுதல் பெட்டிகள் இணைப்பு
சென்னையில் மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 4 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். பீக் ஹவர்களில் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருவதால் , கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணியரின் கோரிக்கையை ஏற்று , அலுவலக நேரங்களில் ஆறு பெட்டிகளாக இணைத்து இயக்குவது குறித்த ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது ;
தற்போதுள்ள , முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அதிக பட்சமாக இரண்டரை நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்கும் அளவுக்கு தொழில் நுட்ப வசதி இருக்கிறது. பயணியரின் தேவைக்கு ஏற்றார் போல் , மெட்ரோ ரயில் சேவையின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறோம். வரும் ஆண்டுகளில் பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் போது , கூடுதல் ரயில்களை இயக்கவும் தயாராக உள்ளோம்.
ரூ.2000 கோடியில் வாங்க முடிவு
அதன்படி , முதல் முறையாக ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுளோம். தற்போதுள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் , போதிய அளவில் நடைமேடை வசதி இருப்பதால் , விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டியதில்லை. முதல் கட்டமாக , 28 புதிய மெட்ரோ ரயில்கள் 2,000 கோடி ரூபாயில் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி உதவியை பெற பல்வேறு வங்கிகளிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு மாதங்களில் நிதி வசதி கிடைத்தவுடன் விரைவில் டெண்டர் வெளியிடப்படும். அதன் பிறகு புதிய மெட்ரோ ரயில்கள் படிப்படியாக கொண்டு வரப்பட்டு சேவையில் இணைக்கப்படும். இவ்வாறு கூறினர்.