டிஜிபி அலுவலக வளாகத்தில் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்: தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு அவமானகரமான எடுத்துக்காட்டு என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,
ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்
சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில், காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குனரை சந்திப்பதற்காக காத்திருந்த புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஏர்போர்ட் மூர்த்தி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பட்டப்பகலில் காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு வெளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு சமூக, அரசியல் கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதிலிருந்தே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு தாக்கும் போது அங்கிருந்த காவலர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். மூர்த்தியைப் பாதுகாக்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், அதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல முறை கூறிவிட்டேன். ஆனால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ, அக்கறையோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இது தான் காரணம் ஆகும்.
தமிழக அரசும், காவல்துறையும் இனியாவது விழித்துக் கொண்டு சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; மூர்த்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டிஜிபி அலுவலகத்திற்கு வந்த ஏர்போர்ட் மூர்த்தி தாக்குதல்
புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, இன்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளிக்க வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டிஜிபி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது, அலுவலக நுழைவு வாயிலில் நான்கு பேர் கொண்ட கும்பல் அவரைத் சரமாரியாக தாக்கியுள்ளது.
ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகவும், அதனால் தான் இந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விசிகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பின்னர், அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
டிஜிபி அலுவலகத்தின் வாயிலில், காவல்துறையின் முன்னிலையில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.