தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை இன்று (11.08.2023) மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினம் வருகின்ற செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை உள்ளதால் சென்னையில் இருந்து பல லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுருப்பர். வெகு நாட்களுக்கு பின், தொடர் விடுமுறை வருவதால் சிலர் ஒரு நாள் விடுப்பு எடுத்து ஊருக்குச் செல்ல முடிவு செய்திருப்பர். சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்பர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 11,12,13,15 ஆகிய தேதிகளில் கூடுதலாக 1,110 பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ சேவையில் மாற்றம்
சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சாலை வழியான பயணத்திற்கு மாற்றாக மெட்டோ ரயிலில் பயணிப்பதை தேர்வு செய்கின்றனர். தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இயக்கப்படுகிறது.
மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5/6 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று மட்டும் (11.08.2023) மெட்ரோ இரயில் 5 மணி முதல் இரவு 10 மணி வரை 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ டிராவல் கார்டு
மெட்ரோ ரயிலில் மக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்க பயணிகள் மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தலாம். ரூ. 50 டெபாசிட் தொகை செலுத்தி (Non Refundable) மெட்ரோ கார்டுகளை பெறலாம். இதில் அதிகப்பட்ச தொகையாக உங்கள் விருப்பப்படி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மெட்ரோ கார்டை பயன்படுத்தி பயணிக்கலாம்.
டிக்கெட் பெறும் வசதி:
ஏற்கனவே பயண அட்டை, QR Code, வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது. இதில் அடுத்த கட்டமாக புதிய வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, சென்னை பேடிஎம் செயலியில் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பேடிஎம் செயலியில் சென்னை மெட்ரோ என சர்ச் செய்து அதிலேயே டிக்கெட் பெற முடியும். மெட்ரோ ஸ்டேஷனில் இந்த டிக்கெட்டை ஸ்கேன் செய்து பயணம் செய்ய முடியும். இந்த வசதி பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெறுவதை தவிர்த்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. 20% கட்டண தள்ளுபடியையும் இதன் மூலம் பெறலாம்.
எப்படி டிக்கெட் பெறுவது?
மெட்ரோ ரயில் பயணிகள் தங்கள் செயலியில் மெட்ரோ பிரிவின் கீழ் நுழையும் நிலையம் மற்றும் சேரும் இடத்தை குறிப்பிட்டு பயணச்சீட்டை வாங்க முடியும். Paytm Wallet, Paytm UPI, paytm UPI Lite, Paytm Postpaid, Net Banking, Cards போன்ற கட்டண விருப்பங்களை பேடிஎம் ஆப்பில் தேர்வு செய்து கொள்ளலாம். மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் டிடெக்ட்டிங் மெஷின்களில் க்யூ-ஆர் கோர்டு ஸ்கேனரின் முன் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போனை வைத்த பின்னர் மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளலாம்.