சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்கள் இடிந்து விழுந்ததில், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் உயிரிழந்தது சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 

மெட்ரோ ரயில் பணிகள்: 

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நகரின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ நீளமுள்ள 5வது வழித்தடம் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் போரூர் முதல் சென்னை வர்த்தக மையம் வரை பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

இடிந்து விழுந்த கான்கீரிட் இணைப்பு:

இந்த நிலையில் ராமாபுரம் எல்.&டி நிறுவனம், அருகே அமைக்கப்பட்ட உயர்மட்ட கான்கீரிட் பால இணைப்பு நேற்று இரவு திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி சாலையில் தனது பைக்கில் சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சரிந்த விழுந்த கான்கீரிட் இணைப்பு இடிப்பாடுகளை அகற்றும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.  இந்த விபத்துத்தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். 

மெட்ரோ நிர்வாகம் அறிக்கை: 

மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு இணைப்பு கர்டர்கள் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தன,  சாலையில் போக்குவரத்தை சரிசெய்ய CMRL மற்றும் அதன் ஒப்பந்ததாரர்கள் போர்க்கால அடிப்படையில் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர், மேலும் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்படும்.

இந்த விபத்தில்  மோட்டார் சைக்கிள் சென்ற ஒருவர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது, மேலும் மோட்டார் சைக்கிளில் பின்னால் வேறு ஒருவர் அமர்ந்து  இருந்ததாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

போக்குவரத்து சீரானது:

போரூர் அருகே மெட்ரோ விபத்தினால் வாகனங்கள் மாற்று பாதைக்கு திருப்பி விடப்பட்ட நிலையில், தற்போது சாலை போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. உடைந்து விழுந்த மெட்ரோ பணிக்கான கான்க்ரீட் அகற்றப்பட்டு, அப்பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது