சென்னை மெட்ரோ ரயிலில் 20 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பயணிக்கும் குழு பயணச்சீட்டு காகித வடிவில் வழங்கப்படும் முறை திரும்ப பெறுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, சென்னை முழுவதும் மெட்ரோ போக்குவரத்து சேவையை விரிவுப்படுத்தும் திட்டத்திற்கான பணிகளும் நகர் முழுவதும் நடைபெற்று வருகிறது.

சென்னையில், மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 'Peak Hours' 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் முதல் ஆலந்தூர் வரை, கோயம்பேடு, எழும்பூர், ஆலந்தூர் வழித்தடத்தில்ரயில்கள் சேவை இரவு 11.17-க்கு கடைசி ரயில் இயக்கப்படுகிறது.

2024- ஆண்டு குடும்பத்தினருடன் சேர்ந்து பயணம் செல்லும் வகையில் குழு பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரே டிக்கெட் எடுத்து மெட்ரோவில் பயணம் செய்யலாம். இதற்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இப்போது டிஜிட்டில் டிக்கெட் முறையை ஊக்குவிக்கும் வகையில், காகித வடிவிலான குழு பயணச்சீட்டு நடைமுறையை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10% தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி 1.3.2025 முதல் திரும்பப் பெறப்படுகிறது.  டிஜிட்டல் பயணச்சீட்டுக்கு மாறுவதை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதே குழு பயணச்சீட்டை பயணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் 20% தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை - டிக்கெட் சலுகை:

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண் (+91- 83000 86000 ) மூலமாக டிக்கெட் மற்றும் Paytm App மூலமாகவும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.