சென்னை மெட்ரோ ரயில்:


சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.  மற்றொரு பக்கம், பயணிகள் சிலர் மெட்ரோ ரயில்களில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.


பெண்களுக்கான பிரத்யேக உதவி எண்கள்:


இதனால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக மகளிர் உதவி எண்ணை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில், ”சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற, பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கி வருகிறது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, சர்வதேச மகளிர் தினத்தன்று, பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த பிரத்யேக மகளிர் உதவி எண் 155370-ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.


மகளிர் உதவி எண் 155370 என்பது 24/7 பெண்களால் இயக்கப்படும் சேவையாகும். மெட்ரோ இரயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்த உதவி எண் பல சேவைகளை வழங்குகிறது, இதில் அவசரகால பதில், தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. தற்போது, இந்த உதவி எண் BSNL நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.


மகளிர் உதவி எண் தவிர, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஏற்கனவே பல முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக தற்காப்புக் கலைகள் மற்றும் சுய பாதுகாப்பு நுட்பங்களில் பயிற்சி பெற்ற “பிங்க் ஸ்குவாட்” பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் குழு மெட்ரோ இரயில் நிலையங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


நடைமேடையில் மிகவும் வெளிச்சத்துடன் கூடிய மகளிருக்கென தனியான காத்திருப்பு பகுதி, மகளிருக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.  ஆடவர் மற்றும் மகளிருக்கென தனியாக, சுத்தமான பொது கழிப்பிடம் மற்றும் இருபாலருக்கான கழிப்பறைகள், தெளிவான மற்றும் அறியும்படியான அடையாளங்களுடன் அனைத்து நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.


பச்சிளம் குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மார்களுக்கென, டயபர் மாற்றுவதற்கான வசதியுடன் பாலூட்டும் அறைகள் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தொல்லைகளைத் தடுத்தல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த அவசரங்களுக்காக தனியாக “உதவி எண் - 155370” 24/7 அடிப்படையில் நமது பயணிகளுக்காக தயாராக உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.