சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது.


சென்னை மெட்ரோ ரயில்:


இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில்,  குடும்பத்துடன் பயணிப்பதற்கான ஒற்றை க்யூஆர் பயணச்சீட்டு  பெறும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  அறிமுகப்படுத்தியுள்ளது.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோவில் ஒன்றாகப் பயணிக்கும் பயணிகளுக்கு வசதியாக, ஒற்றை QR குடும்ப பயணிச்சீட்டு பெறும் வசதியை  21.02.2024 முதல் அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு பயணிக்கும் தனிப்பட்ட QR பயணச்சீட்டுகளை வழங்குவதற்கு பதிலாக, இப்போது பல பயணிகளுக்கு ஒரு QR பயணச்சீட்டை வழங்குகிறது.


Ford Mobility உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த வசதி, 5 பயணிகள் வரையிலான குழுக்களை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வசூல் அமைப்பு வழியாக தடையின்றி பயணிக்க அனுமதிக்கிறது, பயணச்சீட்டு வழங்கும் செயல்முறையை எளிதாக்குகிறது மற்றும் பயணிகளின் வசதியை அதிகரிக்கிறது.


குடும்பத்துடன் பயணிக்க ஒரே ஒரு பயணச்சீட்டு:


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இந்த புதிய முறை மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும், டிஜிட்டல் முறைகளை ஊக்குவிக்கவும் பொதுமக்கள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்துடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும், ”மெட்ரோ இரயில் பயணிகள் மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் கட்டணத்தை  (21.02.2024) முதல் சிங்கார சென்னை அட்டை மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் ஆப்பில் ஸ்டோர் வேல்யூ பாஸ் (SVP) QR மூலம் செலுத்தலாம்.


சிங்கார சென்னை அட்டை (தேசிய பொது இயக்க அட்டை – NCMC) மூலம் பார்க்கிங் கட்டணத்தை செயல்படுத்தும் முதல் மெட்ரோ அமைப்பு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகும். பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் கணினி மேம்பாட்டு மையம் (CDAC) ஆகியவற்றின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் படிக்க


TN Assembly: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. தமிழ்நாடு முதலமைச்சர் திட்டவட்டம்..