Chennai Metro Rail: சென்னனையில் மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தில் 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில்
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து, விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.
ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு சுமார் ரூ.61,843 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. மாதவரம்-சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மொத்தம் 118 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் திட்ட மதிப்பு ரூ.61,843 கோடி ஆகும்.
2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்
இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 138 மூன்று பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத ரயில்களை வாங்க சிஎம்ஆர்எல் திட்டமிட்டுள்ளது. அதாவது, தொலைத் தொடர்பு அடிப்படையில் இயங்கும் ரயில் கட்டுப்பாடு அமைப்பு மூலம் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதற்கான சிக்னல்களை அமைக்க ரூ.1,620 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அமைக்கப்பட்ட உடன் பல்வேறு சோதனைகள் நடைபெறும். இதற்கு உரிய அனுமதி அளித்த உடன் ரயில்களை இயங்கும் பணி தொடங்கும். இந்த சிக்னல் அமைப்பு மூலம் 1.30 நிமிட இடைவெளியில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்த வழித்தடம்?
மாதவரம் முதல் சிப்காட், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி , மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களுக்கு ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ரயில்களுக்கான வடிவமைப்புகள் இறுதி செய்யப்பட்டு, ஒரு மாதத்தில் ரயில்கள் தயாராகிவிடும். பொதுபயன்பாட்டிற்கு வருதற்கு முன், சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், முதற்கட்டமாக அடுத்த ஆண்டு இறுதியில் 26 ஓட்டுநர் இல்லாத ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே முதற்கட்டமாக அடுத்த ஆண்டு இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.