மிக்ஜாம் புயல்:


தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது.  தற்போது இந்த புயல் 230 கி. மீ தொலைவில் இருக்கிறது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, நாளை (டிசம்பர் 4 ஆம் தேதி) காலை தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும். அதன்பிறகு, இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு நெருக்கமாகவும் நகர்ந்து, நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை டிசம்பர் 5 ஆம் தேதி முன் பகலில் ஒரு சூறாவளி புயலாகக் கடக்கும், அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புயல் காரணமாக சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  புயல் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மெட்ரோ சேவை நாளை இயக்குமா என்று பலருக்கு சந்தேகம் எழுந்தது. இதற்கு தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 


சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயங்கும்


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”MICHAUNG புயல் காரணமாக நாளை 04.12.2023 (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். நாளை (04.12.2023) MICHAUNG புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும்.  காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.  இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.


மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாளை (04.12.2023) தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம். அவசிய தேவை உள்ளவர்கள் மட்டும் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.