சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சிய்யின் காரணமாக தமிழ்நாட்டில் வருகின்ற 30ம் தேதி வரை ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது, “ தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சதீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 25ம் தேதி (அதாவது இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை நிலவரம் எப்படி இருக்கும்..? 


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


தமிழக கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27 மற்றும் 28ம் தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அதேபோல், வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 27ம் தேதி தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


தொடர்ந்து, அரபிக்கடல் பகுதிகளில் வருகின்ற 27ம் தேதி இலட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னையில் இரவெல்லாம் கொட்டித்தீர்த்த மழை..


தலைநகர் சென்னையில் இரவு 8.30 மணிக்கு மேல் தொடங்கிய மழையானது விடியற்காலை வரை தொடர்ந்து பெய்து வந்தது. இதன் காரணமாக, சாலைகளிலும், தெருக்களிலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுக்கிறது. அதன்படி, இரவு முழுவதும் சென்னையில் உள்ள கிண்டி, தாம்பரம், சைதாப்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இன்றைய மேகக்கூட்டங்களை பார்த்தால் காலை முதல் வெயில் அடித்தால் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்காக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. 






சென்னையில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் #chennairains என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதையடுத்து, நெட்டிசன்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் மழை பெய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறது. கூடுதலாக விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இரவு முழுவதும் மழை பெய்யுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.