ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் சுமோட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னிலையில் இருக்கின்றன. ஆர்டரின் படி உணவு கொண்டு செல்லும் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக அதி வேகமாக செல்லுதல், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் செல்வது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உணவு வழங்கும் ஊழியர்கள் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்தும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமலும் போக்குவரத்து விதி மீறல்கள் இல்லாமல் உணவு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அடிக்கடி அந்நிறுவனங்கள் உடன் காவல் துறையினர் ஆலோசணைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் அந்நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை காவல் துறையினர் போக்குவரத்து விதிகளை மீறிய பல்வேறு உணவு டெலிவரி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் மீது 978 வழக்குகள் பதிவு செய்து, ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 400 ரூபாய் அபாரதம் விதித்துள்ளனர். அதில் சுமோட்டோ, ஸ்விக்கி மற்றும் டன்சோ ஆகிய நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள் போக்குவரத்து விதிமுறைகளை தடுக்கும் வகையில் கடந்த 30 ம் தேதி சிறப்பு கண்காணிப்பு பணியில் சென்னை காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள் குறுகிய நேரத்திற்குள் விரைந்து உணவு டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதும், அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தவறான திசையில் சாலையில் செல்லுதல், சிக்னல்களில் நிற்காமல் செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படுவது தெரியவந்தது.
போக்குவரத்து விதிமீறிய ஸ்விக்கி நிறுவனத்தை சேர்ந்த 450 பேர் மீதும், சுமோட்டோ நிறுவனத்தை சேர்ந்த 278 பேர் மீதும், டன்சோ நிறுவனத்தை சேர்ந்த 188 பேர் மீதும், ரபிடோ, அமேசான், பிக் பஸ்கட், பிலிப் கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த 62 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு, போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பாக சுமோட்டோ நிறுவனம் இன்ஸ்டன்ட் என்ற பெயரில் கடந்த 22ம் தேதி 'உணவு ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு வழங்கப்படும்' என்று தனது அதிகாரப்பூர்வாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்தது. அதற்கு, சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், சாலையில் செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி எப்படி 10 நிமிடங்களில் பொதுமக்களுக்கு உணவு டெலிவரி செய்யமுடியும். ஆர்டரின் படி உணவு கொண்டு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று சுமோட்டோ நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பி விளக்கம் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய ஆலோசணைக் கூட்டத்திற்கு பிறகு சுமோட்டோ நிறுவன அதிகாரிகள் '10 நிமிட டெலிவரி திட்டம்' இந்தியாவில் சில நகரங்களில் மட்டுமே தொடங்க திட்டமிட்டப்பட்ட ஒரு முன்னோடி திட்டம் என்றும், சுமோட்டோ இன்ஸ்டன்ட் என்ற 10 நிமிட டெலிவரி திட்டம் தற்போது சென்னையில் அறிமுகப்படுத்த திட்டமில்லை. அதேபோல், ‘குறிப்பிட்ட விநியோக நேரம்' சம்மந்தப்பட்ட எந்தொரு திட்டமும் முன்னறிவிப்பு மற்றும் காவல் துறை ஒருங்கிணைப்புடன் மட்டுமே தொடங்கப்படும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.