சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக, அதிலும் குறிப்பாக புறநகர் பகுதிகளை இணைப்பதில், ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் சேவை ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வெயில் வட்டி வதைக்கும் இந்த நேரத்தில், இன்று முதல் ஏசி ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான ஏசி ரயில் சேவை

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரையிலான ரயில் தடம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த வழித்தடத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய ரயில் வழித்தடமாக இது இருக்கிறது.

இந்நிலையில், ஏசி வசதி கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட காலமாக கோரிக்கையை ஏற்று, ஏசி ரயில்களை தயாரித்தது ரயில்வே நிர்வாகம். கடந்த மார்ச் மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, ஏப்ரல் 19-ம் தேதி முதல், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே தமிழகத்தின் முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது.

குளிர்சாதன வசதியுடன் 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் பயணிகள் மகிழ்ச்சியாக பயணம் செய்துவருகின்றனர். இந்த ரயிலில் ரயில் நிலையங்களின் விவர அறிவிப்பு, தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமரா, ஓட்டுநரை தொடர்பு கொள்வதற்கான சாதனம் என பல வசதிகள் உள்ளன. 10 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயிலில், 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரயிலில் அமர்ந்தும், நின்றும் 5,700 பேர் பயணிப்பதற்கான இட வசதி உள்ளது.

இன்றுமுதல் கூடுதல் ரயில் சேவை

இந்நிலையில், மக்களை குளிர்வித்த இந்த ஏசி ரயிலின் சேவையை, பீக் ஹவர்களில் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற ரயில்வே நிர்வாகம், இன்று முதல் கூடுதல் சேவையை தொடங்கியுள்ளது. அதன்படி, 6 வேளைகளில் இயக்கப்பட்டுவந்த ஏசி ரயில் தற்போது 8 வேளைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி,

  • காலை 6.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டிற்கு காலை 7.35 மணிக்கு சென்றடையும்.
  • காலை 7.50 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9.25 மணிக்கு சென்றடையும்.
  • காலை 9.41 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 10.36 மணிக்கு சென்றடையும்.
  • மதியம் 1 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு மதியம் 1.55 மணிக்கு சென்றடையும். 
  • மதியம் 2.30 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டிற்கு மாலை 4 மணிக்கு சென்றடையும்.
  • மாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு மாலை 6 மணிக்கு சென்றடையும். 
  • மாலை 6.17 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டிற்கு இரவு 7.50 மணிக்கு சென்றடையும்.
  • இரவு 8.10 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு இரவு 8.50 மணிக்கு சென்றடையும்.

இந்த புதிய அட்டவணை இன்றுமுதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ரயில் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏசி ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து, மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.