சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 7 வழித்தட பேருந்துகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. பேருந்து எண்களை பகுதி வாரியாக சீரமைத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய வழித்தட எண் மற்றும் அதன் புதிய வழித்த எண் பற்றி தற்போது பார்க்கலாம்.
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக விளங்கும் பேருந்துகள்
சென்னை மக்களின், அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோரின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மாநகரப் பேருந்துகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும், ரயில்கள் போகாத ஏரியாக்களுக்கு கூட பேருந்துகளில் செல்லலாம் என்பதால், எந்நேரமும் பேருந்துகளில் கும்பல் இருந்துகொண்டே இருக்கும்.
இதனால், மாநகர போக்குவரத்துக் கழகத்தால், சென்னையின் பல்வேறு வழித்தடங்களுக்கு ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றை மக்கள் எளிதில் கண்டறியும் வகையில், பகுதி வாரியாக பிரித்து, வழித்தட எண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, அந்த வழித்த எண்ணை வைத்தே, அந்த பேருந்து எங்கு செல்லும் என்பதை மக்கள் நினைவில் வைத்துள்ளனர்.
உதாரணத்திற்கு, 70 வழித்தட எண்களைக் கொண்ட பேருந்துகள், சென்னையை அடுத்து ஆவடி, கோயம்பேடு, கிண்டி, தாம்பரத்தை இணைக்கும் வழித்தடம் என்பது அந்த ரூட்டில் வழக்கமாக செல்லும் மக்கள் மனதில் பதிந்த ஒரு விஷயம். இப்படி, ஒவ்வொரு ஏரியாவிற்கும் என தனி வழித்தட எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் 7 வழித்தட பேருந்துகளின் எண்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாற்றப்பட்ட புதிய வழித்தட எண்கள் என்ன.?
சென்னை மாநகரப் பேருந்துகளின் தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்களை மாற்றியமைத்துள்ளது மாநகரப் போக்குவரத்துக் கழகம். அது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி,
- மாதவரம் - தாம்பரம் வழித்தடம்: மாற்றப்பட்ட புதிய எண் 170A (பழைய எண் 121F)
- கவியரசு கண்ணதாசன் நகர் - தாம்பரம் வழித்தடம்: மாற்றப்பட்ட புதிய எண் 170T (பழைய எண் 121H)
- ஐயப்பன் தாங்கல் - பிராட்வே வழித்தடம்: புதிய எண் 11M (பழைய எண் 11GET)
- பிராட்வே - கிளாம்பாக்கம் வழித்தடம்: புதிய எண் 18A (பழைய எண் 18Ax)
- திருவான்மியூர் - கிளாம்பாக்கம் வழித்தடம்: புதிய எண் 91 (பழைய எண் 91K)
- பூந்தமல்லி - கூடுவாஞ்சேரி வழித்தடம்: புதிய எண் 66px (பழைய எண் 66x)
- கவியரசு கண்ணதாசன் நகர் - கிளாம்பாக்கம் வழித்தடம்: புதிய எண் 121 TX (பழைய எண் 121 H ET)
இந்த புதிய வழித்தட எண்கள் இன்றே அமலுக்கு வருவதாகவும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.