கோயம்பேடு பேருந்து நிலையம் 

 

சென்னையில் பிரதான பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மிக முக்கிய பேருந்து நிலையமாக விளங்கிவரும் கோயம்பேடு பேருந்து ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. சென்னையில் உள்பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தால் குறிப்பாக தொடர் விடுமுறை, தீபாவளி, பொங்கல், உள்ளிட்ட நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

 



 

போக்குவரத்து நெரிசலுக்கு..

 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில்(Kilambakkam) ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.



 

பேருந்து நிலையத்தில் மதிப்பீடு என்ன

 

 

திட்ட செலவு :-  ரூ.393.74 கோடி

 

எவ்வளவு இடம் :-  44.75 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் ( 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி )

 

 

சிறப்பம்சங்கள்:-  அரசு புறநகர் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகள் என அனைத்தும், ஒரே இடத்தில் இருந்து இயங்கும் வகையில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. எழில்மிகு தோற்றத்துடன் அனைத்து வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இங்கு இடம் பெற உள்ளன.



 

எவ்வளவு பேருந்துகளை நிறுத்த முடியும் :-  ஒரே நேரத்தில் 130 அரசுப் பேருந்துகள் மற்றும் 85 தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 2000 க்கும் மேற்பட்ட பேருந்துகளை சிரமமின்றி கையாள முடியும்.

 

புறநகர் பேருந்துகள் :- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல வசதியாக 5 ஏக்கரில் 3,500 மாநகரப் பேருந்துகள் வந்து செல்ல மேற்கூரையுடன் கூடிய நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு அடித்தளங்கள் :-  நவீன தொழில்நுட்பத்தில் இரண்டு அடித்தளங்கள், தரைதளம், முதல் தளம் என கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் அடித்தளத்தில் 260 கார்கள். 568 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் இரண்டாவது அடித்தளத்தில் 84 கார்கள். 



 

இருசக்கர பார்கிங் வசதி:-  2230 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் அமைக்கப்படுகிறது.

 

 

எப்பொழுது துவங்கப்படும் ?

 

இந்த புதிய பேருந்து நிலையம் அமைவது  மூலம் தென் மாவட்டம் செல்லும், பயணிகளுக்கு வரப் பிரசாதமாக அமையும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் வந்து செல்வதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 60 -  70% பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.