மருத்துவக்கட்டமைப்பில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக சென்னை உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போடும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு, பொதுசுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம், எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா, மண்டல குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கணக்கு குழுத் தலைவர் தனசேகர், மாமன்ற உறுப்பினர்கள் என பலர் உடனிருந்தனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதிலும் 38வது தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 50ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. இதில் இரண்டாம் தவணை, பூஸ்டர் தடுப்பூசிகளும் போடப்படுகிறது. 38வது முகாம் தொடர்ச்சியாக நடைபெறுவது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் என்றார். வரும் 30ம் தேதியுடன் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நிறைவுறும். இது தொடருமா கட்டணம் செலுத்த வேண்டுமா என்பது குறித்து ஓரிரு நாளில் தெரியவரலாம்.
1-ம் தேதிக்கு பின் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதை போல் ஒவ்வொரு புதன் கிழமை 13 வகையான தடுப்பூசிகள் துணை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாமாகவே நடைபெறும். பள்ளிகளில், வியாழக்கிழமையும் தடுப்பூசி போடப்படும். இதுவரை முதல் தவணை 96 சதவீதமும், இரண்டாம் தவணை 91 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் பூஸ்டர்போடுவதில் மிகப்பெரிய சிரமம் உள்ளது. 4 கோடிக்கு மேல் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள். ஆனால் 86 லட்சம் பேர் வரை தான் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இன்னும் 5 நாட்கள் பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படுகிறது. அவற்றை பயன்படுத்திக்கொள்ளவும்.
கிருஷ்ணகிரியில் மக்களை தேடி மருத்தும் திட்டம் முதலமைச்சர் தொடங்கிவைக்கப்பட்டது. 90 லட்சமாவது பயனாளிக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகளை வழங்கப்பட்டுள்ளது. 74% பொதுமக்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். மிகவிரைவில் ஒரு கோடி பயனாளியை இத்திட்டம் அடையும். அரசு உறுதியளித்ததைபோல் சுகாதாரத்துறை முதலிடத்திற்கு வருவது மட்டுமல்லாமல் மக்களுக்கு பெரிதும் பயனளித்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை இந்தியாவிற்கே முன்னுதாரணமான மருத்துவக்கட்டமைப்பை கொண்டுள்ளது. 40% பேருக்கு பரிசோதனை இத்திட்டதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் வீடுகளுக்கே தேடி சென்று மருத்துவம் பார்க்கும் நிலை 100% தொடவுள்ளது. அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக 10 பேர், தனியார் மருத்துவமனையில் 269 பேர், வீடுகளில் 186 பேர் என மொத்தம் 465 சிகிச்சை பெறுகின்றனர்.
ஹச்1 என்1-ஆல் பாதிக்கப்பட்ட 5 வயதிற்குட்பட்டவர்கள் 81 பேர், 14 வயதிற்குட்ப்பட்டவர்கள் 62 பேரும் சிகிச்சையில் உள்ளனர். கட்டுக்குள் தான் உள்ளது. கொரோனா உயர்வதாக எதிர்கட்சி துணைத்தலைவர் சொல்வது தவறானது. தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. எங்கெல்லாம் 104 என்ற எண்ணை தொடர்புக்கொண்டு தகவல் தெரிவிக்கிறார்களே உடனடியாக மருத்துவக்குழு அங்கு சென்று பணி செய்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.