தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


இதையும் படிக்க: நான் ஆடு மேய்ச்சுத்தரேன்; நீங்க தடுப்பூசி போட்டுக்கோங்க - டாக்டரின் சூப்பர் ஸ்பீச்


குறிப்பாக சைதாப்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. மாநகர் பகுதிகளான மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்த‌து. இதேபோல் அடையாறு திருவான்மியூர், கிண்டி, சைதாபேட்டை போன்ற இடங்களிலும் பரவலாக மழை பொழிவு காணப்பட்டது. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, நீலாங்கரையிலும் அதிகாலை நேரத்தில் மழை பெய்த‌து.







இந்நிலையில் ஆங்காங்கே மழைநீர் தேக்கமடைந்து வருகிறது. சாலைகளில் வெள்ளம்போல மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்தனர். இதனைத்தொடர்ந்து சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தேங்கி இருக்கும் நீரை உறிஞ்சும் மோட்டார்களை சரிபார்க்கும் பணிகள் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. அதுபோல மழைக்காலங்களில் மரங்கள் சாலைகளில் விழும். அவற்றை அப்புறப்படுத்துவதற்காக மரம் அறுக்கும் இயந்திரங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வெள்ளம் தேங்கியுள்ள இடங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மற்ற அதிகாரிகள் பார்வையிட்டனர்.