வெளிநாட்டில் வேலை செய்வது என்பது பலருக்கும் கனவாக உள்ளது. தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் வெளிநாட்டிற்கு சென்று படிப்பது, சுற்றுலா செல்வது, மருத்துவ தேவைக்காக செல்வது,  உள்ளிட்டவற்றுக்காக தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வெளி நாட்டிற்கு செல்வதற்கு கட்டாயம் பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. இதற்காக, சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.



 

பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு, நேர்காணல் நடத்தப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் பதிவுசெய்து, முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு, குறிப்பிட்ட தேதியில் நேர்காணல் நடத்தப்படும். சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரத்தில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைந்துள்ளன. தற்பொழுது பாஸ்போர்ட் தேவைக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தினால், பணிகள் மேற்கொள்வது தாமதமாகிறது.



 

இந்நிலையில், மக்களுக்கு கூடுதல் சேவை வழங்கும் வகையில், வாட்ஸ்- அப் வீடியோ கால் மூலம் குறைகளை நிவர்த்தி செய்யும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டலத்தை சேர்ந்த பாஸ்போர்ட்   அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுவாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது சிலர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் விண்ணப்பிக்கின்றனர், அல்லது விண்ணப்பத்தை தவறாகப் பூர்த்தி செய்கின்றனர். இதனால், அவர்களுக்கு உரிய நேரத்தில் பாஸ்போர்ட் வழங்க முடிவதில்லை.



 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு உரிய தகவல் கிடைக்காததால், தொடர்ந்து எங்கள் அலுவலகத்துக்கு வருகின்றனர். இதனால், அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக, வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம், அவர்களது குறைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் புதிய சேவையைத் தொடங்கியுள்ளோம். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை இந்த வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் விண்ணப்பதாரர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படுகிறது.



 

விண்ணப்பதாரர்கள் 730533 0666 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வீடியோ கால் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். மக்களின் வரவேற்பை பொறுத்து, குறைதீர் நேரத்தை நீட்டிக்கவும், வாரத்துக்கு இரண்டு நாட்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள ட்விட்டர், ஸ்கைப், தொலைபேசி, இ-மெயில் சேவைகள் மூலமாகவும் விண்ணப்பதாரர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு, தங்களது குறைகளுக்கு தீர்வுகாணலாம் என தெரிவித்தார். இதன் மூலம் பொதுமக்கள் வீணாக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வருவது குறையும்.  மேலும் பாஸ்போர்ட் தொடர்பான குறைகளை வீடியோ கால் மூலம் கேட்கும் திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X