வர்த்தக சின்ன பிரச்னை தொடர்பாக ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போல உள்ளதால் மொபைல் பே செயலிக்கு தடை விதிக்க கோரியிருந்தது.
அந்த மனுவில், மொபைல் பே செயலியின் லோகோ, ஃபோன் பே செயலியின் லோகோ போல் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், இரு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக கூறி, மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அனுமதித்த நீதிபதி, இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குவது தொடர்பான ஃபோன் பே கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள கோவில் திருவிழாவை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்குள் அமைந்துள்ள ஆதிகருவண்ணராயர் பொம்மதேவர் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி நாளில் திருவிழா நடத்தப்படுவதுண்டு.
இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிவதால், புலிகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பதாக கூறி, கோவையைச் சேர்ந்த கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திருவிழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என நிர்ணயிக்கும்படியும், அந்த எண்ணிக்கைக்கு அதிகமாக பக்தர்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிடவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சொக்கலிங்கம் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் வருவதால் புலிகள் சரணாலயத்தில் காற்று மாசும், ஒலி மாசும் ஏற்படுகிறது எனவும், விழாவில் பலியிடும் விலங்குகளின் கழிவுகளை விட்டுவிட்டு செல்வதாலும், பட்டாசுகளை வெடிப்பதாலும், விறகுகளை பயன்படுத்தி சமைப்பதாலும் சரணாலயத்தில் மாசு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
அப்போது தமிழக அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, கோவில் விழாவுக்கு 50 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாகவும், அனைத்து துறைகளின் அனுமதித்த பிறகே பக்தர்கள் வனத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாகவும், திருவிழாவை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக விரிவான பதில்மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.