சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் முழு திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.


திருமாவளவன் தந்த சிலை


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனால் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அன்று பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாளை ஒட்டி சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலை, அந்த இடத்தில் நிறுவுவதற்காக வழங்கப்பட்டது. அதனை நிறுவுவதற்கான பணிகள் நடைபெறும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் மே 14 அன்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் அச்சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



இன்று திறந்து வைத்தார்


அதன்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்டோபர் 27) சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் வழங்கிய டாக்டர் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார். 


தொடர்புடைய செய்திகள்: Headlines Today : நயன் - சிவன் விதிகளை மீறவில்லை.. தங்கக் கவச வழக்கில் திடீர் திருப்பம்.. மொபைல் பே- க்கு தடை.. இன்னும் பல!


நிகழ்வில் கலந்துகொண்ட திருமா


இந்த நிகழ்வில் அம்பேத்கர் சிலையை கொடுத்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் உடன் எம்.எல்.ஏ ஷா நவாஸ் கலந்துகொண்டார். இவர்களோடு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்


இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா ஆகியோருடன் துணை மேயர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.