சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

சென்னையில் மீன்பிடி தொழில் செய்து வரும் தேசப்பன் என்பவர், அவர் வசித்து வந்த பகுதியில் உள்ள இரண்டு சிறுவர்களை  தனது வீட்டிற்கு அருகில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனை பார்த்த பெண்மணி சிறுவர்களின் தாய்க்கு தகவல் கூறியுள்ளார்.

 

இளைஞரிடம் இருந்து மகன்களை காப்பாற்றிய தாய், தேசப்பன் மீது காவல் நிலையதில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை பதிவு செய்த வழக்கில் தேசப்பனை கைது செய்யப்பட்டார் .

 

2016ல் நடந்த சம்பவம் தொடர்பான் வழக்கை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்து வந்தார். அப்போது தேசப்பன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆவதாக கூறி,  அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இரண்டு பேருக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கும் உத்தரவிட்டார்.

 

















 

மற்றொரு வழக்கு

 

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் நீர் பாசன வசதி பெறாத ஊர்களுக்கு திருப்பி விடக் கோரி வழக்கு.

 

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு, வீணாக கடலில் கலக்கும்  உபரிநீரை, ராட்சச குழாய்கள் மூலம், சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களுக்கு திருப்பி விட  நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு, 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

ஆண்டுதோறும் பருவ மழை காலத்தில், மேட்டூர்  அணையில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு, வீணாக கடலில் கலக்கிறது. 

 

இந்த உபரிநீரை சேலம் மாவட்டம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், பெத்தநாயகன்பாளையம், கெங்கவல்லி பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் ராட்சச  குழாய்கள் மூலம் வசிஷ்ட நதி, சுவேத நதி மற்றும் ஏரி - குளங்களுக்கு திருப்பிவிடக்  கோரி சேலம் மாவட்டம், புலியங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் என்.பெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல   வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில்,  தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் பாசன வசதிக்காக வழங்கும் மேட்டூர் அணை அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில், 5 கிராமங்களில் மழையை நம்பியே விவசாயம் உள்ளதால்,   உபரிநீரை பயன்படுத்தும் வகையில்,  சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

 

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, நான்கு வாரங்களில் இதுகுறித்து பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு  உத்தரவிட்டு,  விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.