சென்னை தீவுத்திடலில் சென்னை திருவிழா சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா இன்று தொடங்குகிறது. இந்த உணவுத்திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தீவுத்திடலில் சென்னை திருவிழா
இன்று முதல் மே 15-ஆம் தேதி வரை நடக்கும் சென்னை திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். திருவிழாவில் 311 அரங்கங்கள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன் உணவு திருவிழா நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் தீவுத்திடலில் நடைபெறும் இத்திருவிழா காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். ரூ.15 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் இத்திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் பங்கேற்கின்றனர்.
கண்காட்சியில் பங்கேற்கும் வெளிநாட்டினர்
சென்னை திருவிழாவில் நடைபெறும் கண்காட்சியில், பூட்டான், நைஜீரியா, வங்க தேசம், ஈரான், நேபாளம், தென் ஆப்ரிக்கா, இலங்கை, உகாண்டா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்துவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்கள் பொருட்களை 80 அரங்குகளில் காட்சிப்படுத்துவார்கள் என்றும், தமிழத்தில் இருந்து 70 ஸ்டால்கள் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புவியியல் குறியீடு பெற்ற பொருட்களும் இங்கு முன்னிலைப்படுத்தப்படும். சில பொருட்கள் தயாரிக்கப்படும் விதம் குறித்தும் கண்காட்சியில் செய்து காண்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உணவுத் திருவிழா
கடந்த ஆண்டு உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையின் 3 நாள் உணவுத் திருவிழா சென்னை தீவுத்திடலில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. விழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்ட 150 ஸ்டால்கள் அமைக்கப்பட்டன. உணவு வீணாவதை தடுக்கும் முறைகள் மற்றும் எந்த வகையான உணவுகளை உண்பது ஆரோக்கியமானது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கற்றுத்தரப்பட்டன.
பாரம்பரிய உணவுகள், சமையல் போட்டிகள் மற்றும் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலை 7 மணிக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க