ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் பற்றி தமிழ்நாடு அரசு பதில் அளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்த முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசு, 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இணையவழி சூதாட்ட தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய வழக்கு ஜூன் 2ஆவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.


"சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது"


முன்னதாக, வழக்கின் விசாரணையில், சென்னை உயர் நீதிமன்றம் பல முக்கிய கேள்விகளை எழுப்பியிருந்தது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்த நீதிமன்றம், உயிரிழப்பை தடுக்க ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பியது.


தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது உயிரிழப்பை தடுக்க ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியதில் என்ன தவறு உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.


சூதாட்டத்தில் ஏற்படும் மரணங்கள், குடும்ப வறுமை ஆகியவற்றை தடுக்கவே இந்த மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன் மக்களை காக்கவே சட்டம் இயற்றியுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியதை மேற்கோள் காட்டியநீதிபதிகள், தமிழ்நாட்டில் குதிரைபந்தயம், லாட்டரி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதை தெரிந்து கொள்ளுங்கள் என விளையாட்டு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.


ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்:


கடந்த 2022ஆம் ஆண்டு, தமிழக அரசு,  ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை இயற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பினார். மீண்டும் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு, ஆளுநர் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.






இந்த சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.





அதில், தமிழ்நாடு அரசின் தடை சட்டத்தால் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும், ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான திருத்த விதிகளை அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.