சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது ஏற்ப்பட்ட கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
எண்ணூர் விபத்து:
எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமான பணியில் முகப்பு சாரம் சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர், மேலும் காயமடைந்த பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 9 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டத் தகவலின்படி, உயிரிழந்த 8 பேரும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் இந்த விபத்தில் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெறுபவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்துக்கு காவல்துறை மற்றும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர்.
இரங்கல்:
எண்ணூர் விபத்து குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள பதிவில் இன்று(30.09.2025) எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணியின் போது சாரம் சரிந்து வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் இறந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், காயமுற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்கள் என்றும் செய்திகள் வருகின்றன.
இந்த துயரச் சம்பவம், கட்டுமானப் பணிகளின் பாதுகாப்பு குறித்த அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. முறையான திட்டமிடல் இல்லாமை, கட்டுமானப் பணியில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது, கட்டுமானப் பொருட்களின் தரக்குறைவு போன்றவையே இத்தகைய துர்மரணங்களுக்கு காரணமாகின்றது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற விரும்பதகாத நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்கவேண்டும்.
விலை மதிப்பற்ற உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த சனிக்கிழமை அன்று தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் 41 உயிரிழந்த சோகமே அகலாத நிலையில் இந்த விபத்து செய்தி பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.