சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் பயணி ஒருவர், பெருமளவு போதைப்பொருள் கடத்தி வருவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது.
இதனை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, சாதாரண உடையில் வந்திருந்து, அந்த விமானத்தில் இறங்கி வந்த பயணிகளை கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
அதிகாரிகளுக்கு சந்தேகம்
அப்போது 35 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணி விசாவில், கம்போடியா நாட்டிற்கு சென்று விட்டு, சிங்கப்பூர் வழியாக, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அந்த ஆண் பயணி மீது, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து, அந்தப் பயணியை, மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதை அடுத்து அந்தப் பயணியை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். அதோடு அவருடைய உடைமைகளையும் பரிசோதித்தனர். உடைமைகளில் மறைத்து வைத்திருந்த, 3.5 கிலோ கொக்கைன் போதைப் பொருளை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 35 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், போதை கடத்தல் பயணியை, கைது செய்து, சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இந்தக் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள 35 வயது பயணி, சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.
மேலும் இவர் கடத்திக் கொண்டு வந்த இந்த போதை பொருளை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள இரண்டு போதை கும்பலுக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்தார் என்றும் தெரிந்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அந்த போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவரையும், அங்கு பிடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ரூ. 35 கோடி மதிப்புடைய, 3.5 கிலோ கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டு, மேலும் இருவரை மும்பை டெல்லியில் பிடிக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.