சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சில முக்கிய ரயில்களின் புறப்படும் மற்றும் வந்து சேரும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையம்
சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையம், சுமார் 114 ஆண்டுகள் பழமையானது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் — மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், நெல்லை, ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு — அனைத்தும் இங்கிருந்தே புறப்படுகின்றன. நெல்லை எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல முக்கிய ரயில்கள் தினசரி எழும்பூரில் இருந்து இயங்குகின்றன. இதனால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
விமான நிலைய வசதிகளுடன் எழும்பூர்
இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 2022 முதல் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விமான நிலைய தரத்தில் மாற்றம் பெறும் வகையில், பல அடுக்குகள் கொண்ட கார் மற்றும் பைக் பார்க்கிங், உணவகங்களுக்கு பிரத்யேக இடங்கள், அனைத்து நடைமேடைகளையும் எளிதில் அணுகும் வசதிகள், 32 நகரும் படிக்கட்டுகள், 47 லிஃப்ட் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.
9 ரயில்கள் புறப்பாடு மாற்றம்
இதன் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 9 ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- சென்னையிலிருந்து திருச்சி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (12653) செப்டம்பர் 11 முதல் நவம்பர் 10 வரை எழும்பூர் மாற்றமாக தாம்பரத்தில் நள்ளிரவு 12.03 மணிக்கு புறப்படும். அதேபோல், திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (12654) செப்டம்பர் 10 முதல் நவம்பர் 9 வரை தாம்பரத்தில் நள்ளிரவு 3.30 மணிக்கு வந்து சேரும்.
- மதுரை–சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) செப்டம்பர் 10 முதல் நவம்பர் 9 வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் அதிகாலை 4.45 மணிக்கு வந்து சேரும். ஆனால், சென்னை–மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637) வழக்கம்போல எழும்பூரிலிருந்தே புறப்படும்.
- சென்னை–திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் (22675) செப்டம்பர் 11 முதல் நவம்பர் 10 வரை தாம்பரத்தில் காலை 8.12 மணிக்கு புறப்படும். ஆனால், திருச்சி–சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் (22676) வழக்கம்போல எழும்பூரிலேயே வந்து சேரும்.
- சென்னை–ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் (22661) செப்டம்பர் 11 முதல் நவம்பர் 10 வரை தாம்பரத்தில் மாலை 6.20 மணிக்கு புறப்படும். அதே ராமேஸ்வரம்–சென்னை சேது எக்ஸ்பிரஸ் (22662) செப்டம்பர் 10 முதல் நவம்பர் 9 வரை தாம்பரத்தில் காலை 6.35 மணிக்கு வந்து சேரும்.
- சென்னை–ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16751) செப்டம்பர் 11 முதல் நவம்பர் 10 வரை தாம்பரத்தில் மாலை 7.42 மணிக்கு புறப்படும். அதேபோல், ராமேஸ்வரம்–சென்னை எக்ஸ்பிரஸ் (16752) செப்டம்பர் 10 முதல் நவம்பர் 9 வரை தாம்பரத்தில் காலை 6.45 மணிக்கு வந்து சேரும்.
- சென்னையிலிருந்து மும்பைக்கு செல்லும் CSMT எக்ஸ்பிரஸ் (22158) மட்டும் எழும்பூருக்கு பதிலாக செப்டம்பர் 11 முதல் நவம்பர் 10 வரை சென்னை பீச் ரயில் நிலையத்தில் காலை 6.45 மணிக்கு புறப்படும். ஆனால் மும்பையிலிருந்து சென்னைக்கு வரும் (22157) வழக்கம்போல எழும்பூரிலேயே வந்து சேரும்.
இரண்டு மாதங்களுக்கு மட்டுமே மாற்றம்
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளின் காரணமாக, செப்டம்பர் 10 மற்றும் 11 முதல் நவம்பர் 9 மற்றும் 10 வரை, இந்த 9 ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் பிறகு மீண்டும் அனைத்து ரயில்களும் எழும்பூரிலிருந்தே வழக்கம்போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது