தமிழ் சினிமாவில் தவிர்க்கும் முடியாத நாயகனாக விஜய் இருந்து வருகிறார். விஜய்க்கு ஆரம்ப கால கட்டத்தில் இருந்து அரசியல் மீது ஆர்வம் இருந்து வந்தது. அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி மக்களுக்கு சேவை செய்து வந்தார். அதேபோல விஜய் மக்கள் இயக்கம், விஜய் நடித்து வெளிவரும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பிரம்மாண்ட வரவேற்புகள், கட்டவுட்டுகள் வைப்பது, நல்ல திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 


இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்,  விஜய் மக்கள் இயக்கம் சார்பில்   தனது ரசிகர்களை களம் இறங்க உத்தரவிட்டார். குறிப்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள், விஜயின் புகைப்படம் , விஜய் மக்கள் இயக்கத்தின் கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என அனுமதி அளித்திருந்தார். இதன்மூலம் விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஆழம் பார்த்தார் என கருதப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர், வார்டு உறுப்பினர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர்.

 


இதனை அடுத்து இந்த வருடம் நடைபெற்ற, நகர் மன்ற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் சார்பில் வேட்பாளர்களை களம் இறக்கியிருந்தனர். பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், பல இடங்களில் கணிசமான அளவு வாக்குகளை பெற்றிருந்தனர். இதனை அடுத்து விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த திட்டம் தீட்டி இருந்தார். இதனை அடுத்து, விஜய் மக்கள் இயக்கத்தில்  பல மாவட்டங்கள் புதியதாக பிரிக்கப்பட்டு, புதிய அணிகளை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டார். 

 

அதேபோல விஜய் பிறந்த நாளின் பொழுது கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டு, நல திட்ட உதவிகளை வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தார். விடுமுறை நாட்கள் உள்ளிட்ட நாட்களில், மக்கள் பணியாற்றவும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் சார்பில் தமிழக முழுதும் நல்ல திட்ட உதவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

 

இந்த நிலையில், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் விஜய் மக்கள் இயக்கம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது; அதிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக் கொண்டால் தான் அதன் எதிர்காலம் நன்றாக இருக்கும்; இது குறித்து பலமுறை மகன் விஜய்யிடம் எடுத்துக் கூறியுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.


 

இந்த நிலையில் நேற்று இரவு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு திடீரென அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் இன்று புதன்கிழமை காலை 10:30 மணி அளவில், சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பனையூரில்  உள்ள  அலுவலகத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . கலந்து கொள்ள வேண்டிய நிர்வாகிகள்  பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர், தொண்டரணி மாவட்ட தலைவர், இளைஞரணி மாவட்ட தலைவர் ,மகளிர் அணி மாவட்ட, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர், இணையதள அணி மாவட்ட தலைவர், மீனவர் அணி மாவட்ட ஆகிய அணிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.