செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட டிபன்ஸ் காலனி பகுதியில் வசிப்பவர் லட்சுமி (62). இவர் தனது தாய் கன்னியம்மாள் மற்றும் தந்தை ஆறுமுகம் ஆகிய மூவரும் வசித்து வந்துள்ளனர். ஒருங்கிணைந்த வட ஆர்க்காடு மாவட்டத்தில் அப்பொழுது வாழ்ந்து வந்தனர். ஆறுமுகம் மற்றும் கன்னியம்மாள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த திடீரென ஆறுமுகம் தனது, மனைவியையும் லட்சுமியையும் பல ஆண்டுகளுக்கு முன்பு விட்டு தனியாக சென்றுள்ளார். இதனால் செய்வது அறியாமல் தவித்த கன்னியம்மாள் தனது மகளான லட்சுமியை வயிற்றுப் பிழைப்புக்காக சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் குடியேறியுள்ளனர்.
சில நாட்கள் வறுமையில் வாடிய கன்னியம்மாள் அக்கம்பக்கத்தில், உள்ள பல வீடுகளில் பாத்திரம் கழுவி பல கஷ்டங்களுடன் லக்ஷ்மியை படிக்க வைத்துள்ளார். இதில் லட்சுமி நன்றாக படித்து அண்ணா பல்கலைக் கழகத்தில் ஸ்டெனோகிராபராக பணிபுரிந்து வந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த தாயை பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தாய் கன்னியம்மாள் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார்.
தன்னை கஷ்டப்பட்டு பல இன்னல்களுக்கு இடையே வளர்த்து ஆளாக்கிய எனது தாய்க்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த லட்சுமி தனது பணி ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியத்தை வைத்து தனது தாய்க்கு 20 லட்ச ரூபாய் செலவில் கோயில் கட்டியுள்ளார். இக்கோவிலில் தாய் கன்னியம்மாள் சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்து தினமும் தாயின் சிலைக்கு பூஜை செய்து வருகிறார். இக்கோயிலில் பிள்ளையார் நாகதேவதை பாலமுருகன் வைஷ்ணவி பிராமி மற்றும் நவக்கிரகங்கள் சிலையையும் வைத்து வழிபட்டு வருகிறார். அருகில் உள்ள பொதுமக்களும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தன்னை சிறுவயதிலிருந்தே தனியாளாய் எந்த கஷ்டமும் தெரியாத அளவிற்கு வளர்ந்த தாய்க்கு நன்றி கடனாக சிலை வைத்து வணங்கி வரும் லட்சுமிக்கு பொதுமக்களிடையே பாராட்டும் குவிந்து வருகிறது.
இது குறித்து லட்சுமி கூறுகையில், என் தாயை விட்டுப் பிரிய மனமில்லாமல் தான் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்ததாகவும், என்னை பொறுத்தவரையில் என் தாய் தான் எனக்கு தெய்வம் அதனால் தான் அவருக்கு கோயில் கட்டி பூஜை செய்து வருகிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்