சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தது கிண்டி ரேஸ் கோர்ஸ். ஆங்கிலேயர்கள் காலத்தில் 1945ம் ஆண்டு குதிரைப் பந்தயம் நடத்துவதற்காக 99 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் ரேஸ் கோர்சுக்கு குத்தகைக்கு இந்த இடம் விடப்பட்டது. 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்திற்கான வாடகை பாக்கியை 1970ம் ஆண்டு முதல் ரேஸ் கோர்ஸ் செலுத்தவில்லை என்று தெரியவந்தது.

வாடகை பாக்கி செலுத்தாத ரேஸ் கிளப் நிர்வாகம்:

இதையடுத்து, 1970ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான வாடகை பாக்கியான ரூபாய் 730 கோடியே 86 லட்சத்தை செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால்தமிழகக அரரே நிலத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.


இந்த உத்தரவுக்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகம் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், தமிழக அரசு ரேஸ் கிளப்பிற்கு விடப்பட்ட குத்தகையை ரத்து செய்து நிலத்தை எடுத்துக் கொண்டது. மேலும், ரேஸ் கிளப்பிற்கும் சீல் வைத்தது.  

புதிய நீர்நிலைகள்:


ரேஸ் கிளப் நிலத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டதும் 160 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் என்றும், அதன்மூலம் பருவமழை காலங்களில் சென்னை பேரிடர்களில் இருந்து தப்பிக்க சிறந்த வழியாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தினர். மேலும், வேளச்சேரி ஏரி தொடர்பான வழக்கில் பசுமைத் தீர்ப்பாயமும் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தில் புதிய நீர்நிலைகளை உருவாக்க பசுமைத் தீர்ப்பாயமும் அறிவுறுத்தியிருந்தது.


சமூக ஆர்வலர்களின் அறிவுரை, பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தல், வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட பல காரணங்களால் கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலைகளை உருவாக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

தொடங்கியது குளம் வெட்டும் பணி:


160 ஏக்கர் நிலத்தில் ஏற்கனவே 3 குளங்கள் உள்ள நிலையில், தற்போது புதியதாக 4 குளங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக குளம் தோண்டும் பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தோண்டும் இந்த புதிய குளங்களால் 100 மில்லியன் நீர் சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 3 குளங்களில் 30 மில்லியன் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்த குளங்களை உருவாக்கும் பணிகளை  வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்பே முடிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


மாநகராட்சி வெட்டும் இந்த புதிய குளங்கள் ஒவ்வொன்றும் 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது. மொத்தம் 10 அடி ஆழத்திற்கு குளம் வெட்டப்பட உள்ளது. இந்த புதிய குளங்கள் உருவானால் மழை காலங்களில் அதிகளவு பாதிக்கப்படும் வேளச்சேரியில் பெரியளவிற்கு பாதிப்பு தவிர்க்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், கிண்டி மற்றும் அடையாறிலும் மழை காலங்களில் வெள்ள பாதிப்பு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  மழைநீர் வடிகால்கள் மூலமாக ராஜ்பவன் கால்வாய் வழியாக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் உருவாக்கப்பட உள்ள குளங்களுக்கு மழைநீரை திருப்பிவிட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.