சென்னையில் அதிகளவில் மழை பெய்து வருவதால் நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளிலும், தெருக்களிலும் தேங்கியுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இணைந்து மக்களுக்குத் தேவையான உதவிகளைத் துரிதமாக செயல்படுத்தி வருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி மழைநீர் தேங்கிய சாலைகளில் இறங்கி, மக்களிடம் குறைகளைக் கேட்டு வருவதோடு, மழைநீர் தேங்கிய பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். 


இந்நிலையில் சென்னை முழுவதும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து இருப்பதால், தங்குவதற்கு இடம் இல்லாத மக்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் மாநகராட்சி சார்பாக இயங்கி வரும் நிவாரண மையங்களில் இதுவரை 676 ஆண்கள், 430 பெண்கள் என மொத்தமாக சுமார் 1107 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் நகரம் முழுவதும் இன்று 3,58,500 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் விழுந்த 95 மரங்கள் அகற்றப்பட்டதாகவும், 



உணவு விநியோகம்


 


மழைநீர் தேக்கம் குறித்து பொது மக்கள் இதுவரை 3084 புகார்கள் அளித்துள்ளதாகவும், அவற்றுள் 188 புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதம் தீர்த்துவைக்கப்படாத 2896 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


மேலும், இன்று சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் சென்னையில் தற்போது பெய்து வரும் மழை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தற்போது மழையின் காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தில் மீட்பு, நிவாரணப் பணிகளும், எதிர்வரும் வாரத்தில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை எதிர்கொண்டு அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையாளர் கே.பணீந்திர ரெட்டி ஆகியோருடன் துணை ஆணையாளர்கள், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  15 மண்டலங்களுக்கான கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 



உதவி மையம்


 


ஒருபக்கம் மழைக்கால மீட்பு நடவடிக்கைகளோடு மறுபக்கம் கொரோனா தடுப்பூசியையும் மக்களுக்குச் செலுத்துவதில் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மும்முரமாகப் பணியாற்றி வருகின்றனர்.


மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் மழையால் ஏற்படும் பிரச்னைகளைச் சரிசெய்வதற்காக அழைப்பதற்கு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு சென்னை மாநகராட்சியின் உதவியை நாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.