சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இன்று (ஜூலை.06) முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.


முன்னதாக சென்னை மாநகராட்சி  வெளியிட்ட அறிக்கையில், ”பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.


சென்னையில் அதிகரிக்கும் கொரோனா


பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த இரண்டு வாரங்களாக கோவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 04.07.2022 நிலவரப்படி, 5,936 நபர்களுக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 04.07.2022 அன்று ஒரு நாள் மட்டும் 942 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தொற்று பாதித்த நபர்களில் 5,264 நபர்கள் வீட்டுத் தனிமையிலும், 57 நபர்கள் மாநகராட்சியின் கோவிட் பாதுகாப்பு மையங்களிலும், 263 நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


இவர்கள் அனைவரும் எந்தவித உயிர்பாதிப்பும் இன்றி நலமுடன் உள்ளனர், மண்டல அலுவலங்களில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையத்திலிருந்து வீட்டுத் தனிமையில் உள்ள 5,264 நபர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


பொது இடங்களில் சமூக இடைவெளி


எனவே, பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணியவும். சமூக இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். மேலும், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதி செய்ய வேண்டும்.


அபராதம்


மேற்கண்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் அந்தந்த வார்டுக்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் ஆய்வின் போது முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ரூ.500/- அபராதம் விதிக்கப்படும்.


மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாத 8.68,930 நபர்களும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோயுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 3,76,917 நபர்களும் மாநகராட்சியின் சுகாதார மையங்களில் கோவிட் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இன்று முதல்...


எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும் பொழுது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், பொது இடங்களில் முகக்கவச அணியாத நபர்களுக்கு இன்று (06.07.2022) முதல் தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939இன் படி ரூ.500/- அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.