தண்டையார்பேட்டை, திரு.வி.க., நகர், ஆலந்துார், பெருங்குடி மண்டலங்களில், சாலைகளில் ஐந்து நாட்களுக்கு மேல் பணிகளை துவக்காத ஒப்பந்ததாரர்களுக்கு, 42 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.


சென்னை மாநகராட்சியில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமையேற்ற நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, புதிய சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரவும், ஒப்பந்த நிலையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.


தண்டையார்பேட்டை, திரு.வி.க., நகர், பெருங்குடி,ஆலந்துார் மண்டலங்களில், சாலைகளில் ஐந்து நாட்களுக்கு மேல் பணிகளை துவக்காத ஒப்பந்ததாரர்களுக்கு, 42 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவர் உத்தரவிட்டார். மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் கமிஷனர் சங்கர்லால் குமாவத் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


முன்னதாக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.91 கோடியில் 930 சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் பிப்ரவரி 27-ஆம் தேதி தொடங்கியது.


சென்னை மாநகராட்சி பகுதியில்கடந்த ஆண்டு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதனால் ஏராளமான சாலைகள் பழுதாயின. மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் சாலைகளை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டது.


ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வில் ரூ.1171 கோடியில்1860 கிலோ மீட்டர் நீள சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்குஅரசும் நிர்வாக அனுமதி வழங்கியது. அதன் ஒரு பகுதியாக ரூ.91 கோடியில் 930 சாலைகளை சீரமைக்க திட்டமிட்டப்பட்டது. சிங்காரசென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.41கோடியே 65 லட்சத்தில், 362 சாலைகளை 62 கிலோ மீட்டர் நீளத்திற்க்கு அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரரை இறுதி செய்து, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இப்பணிகள் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி தொடங்கியது.


மேலும், பல்வேறு நிதி ஆதாரங்களின் கீழ் ரூ.50 கோடியில், 100 கிலோ மீட்டர் நீளத்தில் 568 சாலைகளை சீரமைப்பதற்கான டெண்டர்கள் கோரப்பட்டன. ஒப்பந்ததாரர்கள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்க இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 


சென்னையில் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் சாலைகளை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது. 


மேலும் படிக்க, 


'பல்வீர் சிங் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்' - பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி