இலவச பயிற்சி வகுப்புகள் ( SSC CGL-2023  )


தமிழ்நாடு அரசின் “ நான் முதல்வன் “ திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC-CGL-2023), இரயில்வே தேர்வு வாரியம் (RRB)   மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் (IBPS) நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத்துறை வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில்  தமிழ்நாடு அரசின் நான்முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள SSC CGL-2023 போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 25.05.2023 முதல் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.   


செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ( chengalpattu district collector )


இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மற்றும் இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களுடைய விவரங்களை https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX  என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே பயிற்சி வகுப்பில் சேர அனுமதி வழங்கப்படும்.  பதிவு செய்வதற்கான கடைசி தேதி 20.05.2023 ஆகும். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் செங்கல்பட்டு  மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத்  தெரிவித்துள்ளார்.




நான் முதல்வன் ( Naan Mudhalvan )


தமிழகத்தின்‌ பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள்‌ மற்றும்‌ இளைஞர்கள்‌, படிப்பில்‌ மட்டுமல்லாது, வாழ்க்கையிலும்‌ வெற்றி பெறும் வகையில்‌ நான்‌ முதல்வன்‌ என்ற திறன்‌ மேம்பாட்டு மற்றும்‌ வழிகாட்டுதல்‌ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே நான் முதல்வன் இணைய முகப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்.


நான் முதல்வன் இணைய முகப்பில் 2000- க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் அடங்கும். நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் இந்த இணைய முகப்பில் உள்ளன. நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ முக்கிய நோக்கம்‌, ஆண்டுக்குப்‌ பத்து இலட்சம்‌ இளைஞர்களைப்‌ படிப்பில்‌, அறிவில்‌, சிந்தனையில்‌, ஆற்றலில்‌, திறமையில்‌ மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல்‌ ஆகும்‌. இந்தத்‌ திட்டத்தின்‌ சிறப்பம்சமானது, அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின்‌ தனித்‌ திறமைகளை அடையாளம்‌ கண்டு அதனை மேலும்‌ ஊக்குவிப்பது ஆகும்‌. அடுத்தடுத்து அவர்கள்‌ என்ன படிக்கலாம்‌, எங்கு படிக்கலாம்‌, எப்படிப்‌ படிக்கலாம்‌ என்றும்‌ வழிகாட்டப்படும்‌.