உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. கட்சி வாரியாகவும் சுயேச்சையாகவும் இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர்கள் என கடும்போட்டி நிலவுகிறது. தலைநகராக சென்னை மாநகாரட்சியை கைப்பற்றப்போவது ஆளுங்கட்சியா அல்லது எதிர்க்கட்சியா என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கும் நிலையில், திமுகவில் இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



சென்னை மாநகராட்சி கட்டடம்


அதில் விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட 136வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் 22 வயதே ஆன இளம் பெண் ’நிலவரசி’ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  22 வயதில் அரசியல் களத்திற்கு வந்தது ஏன் ? என்ன இலக்கு ? யார் ரோல்மாடல் ? என்ன திட்டம் வைத்திருக்கின்றீர்கள் என்று நாம் அடுக்கடுக்காக அடுக்கிய கேள்விகளுக்கு அசால்டாக பதிலளித்துள்ளார் நிலவரசி.



நிலவரசி துரைராஜ்


கேள்வி : 22 வயதில் அரசியல் களத்தில் இறங்கியுள்ளீர்கள் ? இது திட்டமிட்ட ஒன்றா அல்லது திடீர் திட்டமா ?


நிலவரசி : சிரிக்கிறார்.. சிம்பிள், என்னை நோக்கி ஒரு வாய்ப்பு வந்தது. அதை பயன்படுத்திக்கொள்வதுதானே புத்திசாலித்தனம் ? அதைதான் நானும் செய்திருக்கிறேன். அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமான தேவை. அதை உணர்ந்த முதல்வரும் எங்கள் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் என்னைப்போன்ற பெண்களுக்கு தேர்தல் களத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறார். அப்படி தரப்பட்ட வாய்ப்பை நான் கெட்டியாக பிடித்துக்கொண்டேன். அவ்வளவுதான்.


கேள்வி : 136வது வார்டு பெண்களுக்கானதாக ஒதுக்கப்பட்ட நிலையில், உங்கள் தந்தை நிற்கமுடியவில்லை என்பதால் உங்களை நிறுத்தியிருக்கிறார்களா ? அல்லது உங்களுக்கும் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற அரசியல் விருப்பம் உண்டா..?


நிலவரசி : என் அப்பா துரைராஜ் திமுகவிற்காக பல ஆண்டுகாலம் உழைத்திருக்கிறார். உண்மையில் இது அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு. ஆனால், நீங்கள் சொன்னதுபோல, 136வது வார்டு பெண்களுக்கானதாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், அந்த வாய்ப்பு எனக்கு வந்துள்ளது. எனது குடும்பம்பாரம்பரியமான திமுக குடும்பம் என்பதால், என் உடம்பிலும் அரசியல் ரத்தம் இயல்பாகவே ஊடுருவி இருக்கிறது. ஆனால், நான் இவ்வளவு விரைவில் அரசியலில் களமிறங்குவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.


அதோடு, இப்படி ஒரு வாய்ப்பு பெண்களுக்கு கிடைக்கிறது என்றால் அதை நான் மட்டுமல்ல எந்த பெண்ணும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நானும் அதைதான் செய்திருக்கிறேன்.


கேள்வி : சரி, அரசியலுக்கு வந்துட்டீங்க, வார்டு உறுப்பினரா போட்டியிடுறீங்க, வெற்றியும் பெற்றுவிடுவீர்கள் என்று வைத்துக்கொண்டால், உங்களது எதிர்கால இலக்கு என்ன ? அரசியலில் என்னவாக ஆக வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்..?


நிலவரசி : என்னுடைய முதல் இலக்கு இந்த மாமன்ற தேர்தலில் ஜெயிக்க வேண்டும். தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் என்னை நம்பி கொடுத்துள்ள இந்த பொறுப்புக்கு உண்மையாக உழைக்க வேண்டும்.


அப்படி உழைத்தால், அந்த உழைப்பே என்னை அரசியலில் தூக்கிவிடும். அப்படி உழைப்பை மட்டுமே நம்பி செயலாற்றியதால்தான் இன்று திமுகவுக்கு தலைவராகவும் தமிழ்நாட்டிற்கே முதல்வராகவும் எங்கள் தளபதி மு.க.ஸ்டாலினால் ஆக முடிந்தது. எனவே நான் அர்ப்பணிப்போடு கிடைத்த பொறுப்பை முழு மூச்சோடு நிறைவேற்றுவேன். அதன்பிறகு எனக்கு என் உழைப்பே அரசியலில் வழிகாட்டும் என நம்புகிறேன்.



மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்


கேள்வி : உங்க விருகம்பாக்கம் தொகுதி 136வது வார்டில் என்னென்ன பிரச்னைகள் இருக்கு என்பது உங்களுக்கு தெரியுமா ? மக்களுக்கு எப்படியெல்லாம் பணியாற்றுவீர்கள் ?


நிலவரசி : பலர் சொல்வதை செய்வதில்லை. ஆனால், நான் செய்ய வேண்டும் நினைக்கிறேன். ஏனென்றால் நான் திமுக. எங்கள் தளபதி சொன்னது மாதிரி, ‘நாங்கள் சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’.


எங்கள் வார்டில் இருக்கும் அடிப்படை பிரச்னை தண்ணீர் தேங்குவது, அதுவும் மழைகாலங்களில் அவர்கள் பெரும் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். அந்த சிரமத்தை முதலில் தீர்க்க வேண்டும். அதேபோல், சுகாதார உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தும் சுகாதாரமான வார்டாக என்னுடைய வார்டை மாற்ற முயற்சிப்பேன். ஏனென்றால் ‘நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்’ வார்டை சுத்தமாக சுகாதாரமாக வைத்திருந்தால் மக்கள் தொற்றுநோய் உள்ளிட்ட தாக்குதலில் இருந்து தப்பி பிழைப்பார்கள். அதற்கான முன்னெடுப்பைதான் நான் முதலில் எடுக்கப்போகிறேன்.


எங்கள் தொகுதி எம்.எல்.ஏ அண்ணன் பிரபாகர்ராஜா துடிப்பாக செயல்படுவதை போல, அவரின் வழிகாட்டலில் எனது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க வேண்டும் ; தீர்ப்பேன்.


கேள்வி : உங்களுக்கு அரசியலை பொறுத்தவரைக்கும் ரோல் மாடல் யார் ? உத்வேகமான அரசியல்வாதி என்றால் யாரை சொல்வீர்கள்..?


நிலவரசி : எனக்கு அரசியல் ரோல் மாடல் எங்கள் அண்ணன் ‘உதயநிதி ஸ்டாலின்’தான். அவரு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில எப்படி சுற்றி, சுழன்று வேலை செய்யுறாங்கன்னு நீங்களே பாத்துருப்பீங்களே.., ஆளுங்கட்சியாக இருந்தாலும், முதல்வரின் மகனாக இருந்தாலும் தன்னை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களின் இன்னல்களில் பங்குக்கொண்டு அவர்களுக்கு சேவையாற்றும் அந்த குணம் பிடிச்சுருக்கு, நூற்றாண்டுகால திராவிட இயக்கத்தையும் திமுகவையும் இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது அதன் கொள்கைகளும், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும்தான் என்றாலும், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் இளைஞர் பட்டாளத்தை திமுகவிற்குள் அலைஅலையாக கொண்டுவந்து கட்சியை மேலும் பலப்படுத்தும் பெரும் பணியை அண்னன் உதயா ஆற்றிக்கொண்டிருக்கிறார்.


ஒரு செங்கல்லை வச்சு கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு பெரிய வீடே கட்டியவர் அவர், அவரின் துடிப்பு, அர்ப்பணிப்பு, பெரியோரை மதிக்கும் பண்பு இவை அத்தனையும்தான் அவரை பிடிக்க, ரோல்மாடலாக  நான் எடுத்துக்கொள்ள காரணம்.



உதயநிதி ஸ்டாலின்


கேள்வி : சரி, உங்க வார்டுக்கு நீங்க புதியவர். ஜெயிப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கா..?


பதில் : நான் தேர்தல் அரசியலுக்குதான் புதியவள். ஆனால், எங்கள் வார்டுக்கோ, தொகுதிக்கோ அல்ல. என்னை எங்கள் விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். அதைவிட எங்கள் அப்பாவுக்கு இங்கு பெரும் செல்வாக்கும் மரியாதையும் இருக்கிறது. அந்த செல்வாக்கையும் மரியாதையும் தலைவர் தளபதியின் திட்டங்களையும் சொல்லி நான் வெற்றியை அறுவடை செய்வேன். ஜெயிப்பேன்.


நான் ஜெயித்தபிறகு எனக்கு வாக்களிக்காதவர்கள் கூட வருத்தப்படும் அளவுக்கு செயல்படுவேன்.