தமிழகம் முழுக்க வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில். வேட்புமனு தாக்கலானது இன்றும் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் அதிமுக - திமுக கூட்டணி கட்சிகள், பாமக, மநீம, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இப்படி முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின் போது கூட வரும் அவர்களது ஆதரவாளர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஆன்லைன் வேட்புமனு தாக்கல் முறையை கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 

காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் இந்த நிலை காணப்படுகிறது. இதைத் தவிர்க்க ஆன்லைன் வேட்புமனு தாக்கல் முறையை கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே போக்குவரத்து முடங்கியது. இதுபோன்ற நேரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாவட்ட தேர்தல் அலுவலகமும் மாநகர காவல் துறையும் முன்கூட்டியே, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.



இதுதொடர்பாக நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது, பல்வேறு சாதி, வருமான சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மக்கள் நலத்திடங்களுக்காக விண்ணப்பிப்பது ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது. இதேபோல் வேட்புமனு தாக்கலையும் ஆன்லைன் முறைக்கு மாற்றிவிட்டால், இதுபோன்ற போக்குவரத்து பாதிப்புகளை தவிர்க்கலாம்.



 

வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும் நாளன்று அசல் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபாட் இயந்திரம் என அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறியுள்ள நிலையில் ஆன்லைன் வேட்புமனு தாக்கலும் சாத்தியமான ஒன்றுதான் என்கிறார்கள்.சாலைகளில் தொடர்ச்சியாக பட்டாசுகளை வெடிப்பதால்  மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.



 

எனவே இதுபோன்ற அசவுகரியங்களை தவிர்க்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். வேட்பு மனு தாக்கலை ஆன்லைன் மூலம் செய்தால், வேட்பாளருக்கு மட்டுமில்லாமல் தேர்தல் ஆணையத்திற்கும் செலவு மிச்சம் தானே.

 



ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண