சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மண்டலங்களின் பெயர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர், துணை முதல்வர் உதயநிதியின் சொந்த தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி உள்ளிட்டவை சென்னை மாநகராட்சியின் புதிய மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, வில்லிவாக்கம், தி.நகர், விருகம்பாக்கம், பெருங்குடி – சோழிங்கநல்லூர் ஆகிய 6 மண்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.


புதிய மண்டலங்களின் பெயர்கள்:


சென்னை மாநகராட்சியில் நிர்வாக மண்டலங்களின் எண்ணிக்கையை 15இல் இருந்து 20 ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்தார். மக்கள்தொகை அடிப்படையில் வளங்களை சமமான அளவில் விநியோக்கவும் சேவைகளை திறம்பட வழங்குவதை உறுதி செய்யவும் மண்டலங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை வெளியிட்ட அறிக்கையில், "மண்டலங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருப்பது நிர்வாகத்தை நெறிப்படுத்தவும், சரியான சாலைகள், தெருவிளக்குகள், நீர் வழங்கல், கழிவுநீர் மேலாண்மை மற்றும் திடக்கழிவு அகற்றல் போன்ற அத்தியாவசிய சேவைகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இனி, அனைத்து வசதிகளும் கிடைக்கும்:


குடிமை நிர்வாகத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த நடவடிக்கை நகரத்தின் முதலீட்டு சூழலையும் பொருளாதார வளர்ச்சி திறனையும் வலுப்படுத்தும். கடந்த 2011ஆம் ஆண்டில் 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, அதன் புவியியல் வரம்புகள் 426 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தப்பட்டது.


கடந்த 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 66.72 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அது சுமார் 85 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக 15 மண்டலங்களுக்கிடையே மக்கள் தொகை சீரற்ற முறையில் பரவியுள்ளது. குறிப்பாக, புறநகர்ப் பகுதிகள் அதிவேக வளர்ச்சி கண்டுள்ளன.


தற்போது, ​​சென்னை 15 மண்டலங்களாகவும் 200 வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 22 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நிர்வாக மண்டலங்கள் சட்டமன்றத் தொகுதிகளுடன் இணையாக இல்லாதது குறிப்பிடத்தக்க நிர்வாக சவால்களுக்கு வழிவகுத்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மண்டலங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, தி.நகர்,  விருகம்பாக்கம், பெருங்குடி – சோழிங்கநல்லூர் ஆகிய 6 மண்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: Chennai Mini Bus: சென்னைவாசிகளே! 72 புதிய வழித்தடங்களில் இனி மினி பேருந்து - என்னென்ன ரூட்டு தெரியுமா?