சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 5 வது பிரதான சாலை பகுதியில் உள்ள கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குகளில் தொடர்புடைய ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டு இருந்தது. இன்று காலை ஆறு மணி அளவில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆட்டோக்கள் தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் பொது மக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முற்பட்டனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் 2 ஆட்டோக்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாயின. நீண்ட இழுபறிக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குகளில் சம்பந்தப் பட்ட ஆட்டோ என்பதால் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனரா ? அல்லது தற்செயலாக நடந்த சம்பவமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்ட திருடன் புளியந்தோப்பில் கைது
சென்னை புளியந்தோப்பு பழைய ஆடு தொட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 44. இவர் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் கொரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது தனது இரு சக்கர வாகனம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த புளியந்தோப்பு குற்றப்பிரிவு போலீசார் சி.சி.டி.வி கேமரா காட்சியின் அடிப்படையில் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர் இருசக்கர வாகனத்தை திருடியதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து புளியந்தோப்பு ராமசாமி தெரு பகுதியை சேர்ந்த சல்மான் பாஷா 21 என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து காணாமல் போன இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சல்மான் பாஷா மீது திருவல்லிக்கேணி, அயனாவரம், கொடுங்கையூர், உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.