தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை ராஜ்யசபா எம்.பி. ஆக்க முயற்சி செய்து வருவதாகவும், கூட்டணிக் கட்சிகளிடம் இதற்கான பேச்சுவார்த்தையை பாஜக முடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவர் பதவிக்காலம் கடந்த வருடம் முடிந்த நிலையில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை பாஜக தேசியத் தலைமை அறிவித்தது. கடந்த காலங்களில் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் எல்லாம் இரண்டு முறை தமிழக பாஜக தலைவராக இருந்தனர்.
இதனால் தன்னை தேசியத் தலைமை இரண்டாவது முறையாக தலைவராக அறிவிக்கும் என்று காத்திருந்த அண்ணாமலைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும் இது அதிர்ச்சியை கொடுத்தது. தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவரை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டீர்கள், இனி தமிழ் நாட்டில் பாஜகவின் நிலைமை கடந்து காலங்களைப் போல் மாறிவிடும் என்றும் புலம்பினார்கள்.
தேசிய அளவில் ஒரு முக்கிய பொறுப்பு
அவர்களை சமாதானப்படுத்தும் முனைப்பில் அமித்ஷா, அண்ணாமலையின் அரசியல் அறிவை தேசிய அளவில் பயன்படுத்துவோம் என்றும் அவருக்கு தேசிய அளவில் ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
அதன்படி, பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். டெல்லிக்கு சென்றால் மறுநாளே வந்துவிடுவேன் தமிழ் நாட்டில்தான் நான் இருப்பேன் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இதனிடையே, தேசிய அளவில் அவருக்கு கொடுத்திருக்கும் பொறுப்பு எல்லாம் வேண்டாம், அவரை நாடளுமன்றத்திற்கு அனுப்பு வையுங்கள் என்றும் பாஜக தொண்டர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.
இறங்கி வந்த சந்திரபாபு நாயுடு
இந்த நிலையில்தான் ராஜ்யசபா MP பதவியை அவருக்கு பாஜக வழங்க உள்ளதாக சொல்கின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் பாஜக தலைமை பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவரும் இறங்கி வந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக பாஜக தலைவர்கள் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டால் மத்திய இணை அமைச்சர், மாநிலங்களவை பொறுப்பு வழங்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.