சென்னை வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் தனியார் நிதி நிறுவன வங்கி செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல பணி முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் வங்கியில் இருந்து அலாரம் அடிப்பதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது முன்பக்கம் எந்தவித பூட்டும் உடைக்கப்படாமல் இருந்தது இதனையடுத்து பின்புறம் சென்று பார்த்தபோது வங்கியின் ஜன்னலை உடைத்து வெளியே இரண்டு நபர்கள் தப்பி ஓடுவது தெரிய வந்தது. அவர்களில் ஒருவரை போலீசார் துரத்திப் பிடித்தனர்.
அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் நேபாளத்தைச் சேர்ந்த சாகர் பகதூர் வயது 30 என்பதும் வங்கியில் கொள்ளையடிக்க தனது நண்பருடன் வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அதே பகுதியில் பதுங்கியிருந்த தான் பகதூர் 40 என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அங்கு இவர்கள் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் வங்கியில் பின் பக்க ஜன்னலை உடைத்து உள்ளே செல்லும் போது அந்த வங்கியில் அலாரம் அடித்து உள்ளது அதன் பின்பு வங்கி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் திருடியவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபோதை தலைக்கேறியதால் போலிசின் விரலை கடித்த வழக்கறிஞர்
சென்னை கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் குடித்துவிட்டு மர்ம நபர் ஒருவர் தகராறில் ஈடுபடுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற கொடுங்கையூர் தலைமை காவலர் மாயக்கண்ணன் மற்றும் லோகநாதன் ஆகியோர் அங்கு குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட சுரேஷ்குமார் என்ற நபரை காவல் நிலையம் அழைத்து வர முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி இருவரையும் கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் 2 ஆவது சந்து பகுதியைச் சேர்ந்த சுரேஷ் கமார் (29) என்பதும் மேலும் இவர் வழக்கறிஞராக இருப்பதாக தெரிவித்துள்ளார். குடிபோதையில் இருந்ததால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய போலீசார் முற்பட்டபோது காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டார். அப்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருந்த காவலர் பாபு என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது கை விரல்களை கடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பாபுவை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.