சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 4 ஆவது தெருவைச் சேர்ந்தவர் லதா (42). இவர் பெரியமேட்டில் சில வீடுகளுக்கு வீட்டு வேலை செய்து வருகிறார். லதாவிற்கு சுதா (24) என்ற பெண்ணும் 3  மகன்களும் உள்ளனர். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சுதாவை மாதவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்த பாலாஜி (26) என்ற நபருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். பாலாஜி பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே பாலாஜி மற்றும் சுதா இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.


வியாசர்பாடியில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் மாமியாரை கொன்ற மருமகன் கைது

 

இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுதா பாலாஜியிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கே வந்து விட்டார். இந்நிலையில் , பாலாஜி தனது நண்பரான பெரம்பூர் பகுதியை சேர்ந்த திவ்யாநாத் (31) என்பவருடன் சேர்ந்து வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 4 ஆவது தெருவில் உள்ள தனது மாமியார் வீடான லதா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுதாவிடம் ஏன் என்னை விட்டு பிரிந்து வந்து விட்டாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுதாவின் கையில் வெட்டியுள்ளார். அப்போது தடுக்க வந்த தனது மாமியார் லதாவையும் சரமாரியாக குத்தி உள்ளார். இதற்கு பாலாஜியின் நண்பர் திவ்ய நாத் உடந்தையாக இருந்துள்ளார். இதில் லதாவிற்கு இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது லதா மற்றும் சுதா ஆகிய இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 



 

இதில் சுதா கையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மாமியாரான லதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்.கே.பி நகர் போலீசார் பாலாஜி மற்றும் அவரது நண்பர் திவ்யநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.