தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்குவது சென்னை. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வசித்து வருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக, சென்னையின் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.
பரபரப்பான அண்ணாசாலை:
குறிப்பாக, சென்னையில் முக்கிய பிரதான சாலையாக விளங்குவது அண்ணாசாலை ஆகும். கத்திப்பாரா மேம்பாலத்திற்கு பிறகு சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ஏ.ஜி.டி.எம்.எஸ்., ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி. வழியாக பாரிமுனை செல்லும் சாலையே அண்ணாசாலை என்று அழைக்கப்படுகிறது.
இதில், கத்திப்பாரா மேம்பாலத்திற்கு பிறகு ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்படும் 50 ஆண்டுகள் பழமையான அண்ணா மேம்பாலம் பெரிய பாலமாக உள்ளது. ஆனாலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் அண்ணாசாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கித்தவிப்பது வாடிக்கையாக உள்ளது.
புதிய மேம்பாலம்:
இதைத்தவிர்க்கும் நோக்கத்தில், அண்ணாசாலையில் புதிய மேம்பாலத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி., தேனாம்பேட்டை முதல் – சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் திட்டமதிப்பு ரூபாய் 621 கோடி ஆகும்.
இந்த பாலம் கட்டப்பட்டால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று வாகன ஓட்டிகளும், பயணிகளும் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் அதிகளவில் தி.மு.க. ஆட்சியிலே மேம்பாலங்கள் கட்டப்பட்டன. தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தபோதும் ஏராளமான புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டது. இதையடுத்து, தற்போது கட்டப்பட உள்ள தேனாம்பேட்டை –சைதாப்பேட்டை மேம்பாலம் பெரிய மேம்பாலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை வரையிலான பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: காஞ்சிபுரம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏன் ?
மேலும் படிக்க: Tiruvannamalai: கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை; திருவண்ணாமலை அருகே போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்