காஞ்சிபுரம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு

 


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகர் பகுதிக்கு வெளியே சாலை ஓரமாக தனிமையில், கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த பொழுது, கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்தக் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவமானது கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் 19 வயது கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காதலனின் கழுத்தில் கத்தி வைத்ததால், செய்வதறியாது கத்தி கதறி அழுதும், கல் மனம் படைத்த மது போதை நபர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


 

அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்

 

இச்சம்பவம் நடைபெற்ற பொழுது, காவல் துறைக்கு எவ்வித புகாரும் வரவில்லை என்றாலும், சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார், விசாரணை நடத்தினர். குறிப்பாக காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் தாமாகவே, இந்த புகாரை கையில் எடுத்து, விசாரணையை துரிதப்படுத்தி இருந்தார். இந்த வழக்குத் தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் சம்பவம் நடைபெற்ற , 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்தனர். இந்த வழக்கில் விப்பேடு கிராமத்தைச் சேர்ந்த விமல் குமார் (23). செவிலிமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், விப்பேடு பகுதியை சேர்ந்த தமிழரசன், சிவகுமார், தென்னரசு, வளர்புறம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விக்னேஷ் சிவகுமார் மணிகண்டன் ஆகிய 3 பேரையும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரையின் பெயரில் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


 

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்

 

19 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு என்பதால், குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனையை காவல்துறையினர் பெற்றுத் தர வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. ஆனால் இதுவரை இந்த வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகே வழக்கு விசாரணை நடைபெறும். காவல்துறை தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகை முழு ஆதாரங்களுடன் இருந்தால், குற்றவாளிகளுக்கு  அதிகபட்ச தண்டனையை பெற்று தர முடியும். ஆனால் இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 


விரைவில் தாக்கல் செய்யப்படும்



இதுகுறித்து காவல்துறை தரப்பில் தொடர்பு கொண்டு ஏபிபி நாடு ( ABP NADU )  சார்பில் விசாரித்த பொழுது, மிக முக்கிய வழக்கு என்பதால் குற்றப்பத்திரிகையில், எந்தவித தவறும் இருக்கக் கூடாது என்பதற்காக, சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து  அதற்கான பணிகளை முடித்துள்ளோம். விரைவில் குற்றப்பத்திரிகை இந்த வழக்கில் தாக்கல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட எதிரிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் ஒரு வார காலத்திற்குள், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.