போர்டிங் பாஸ்கள் 

 

சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில், வரும் மார்ச் மாதத்தில் இருந்து சோதனை அடிப்படையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியாவில் முதல் முறையாக, தமிழ்நாட்டில் சென்னை விமான நிலையத்தில், இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு விமான நிலையத்திலும், சர்வதேச விமான நிலையத்திலும், நாளுக்கு நாள்  பயணிகள்  எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக வருகை பயணிகளை விட, புறப்பாடு பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்தப் பயணிகளின் உடைமைகளை பரிசோதித்து போர்டிங் பாஸ்கள் வழங்குவதில், கூட்டம் நெரிசல் காரணமாக, காலதாமதம் ஏற்படுகிறது. சென்னையில் இருந்து புறப்படும்  விமானங்களும் தாமதமாக புறப்படும் நிலை உருவாகி உள்ளது. 

 

மெட்ரோ ரயில் நிலையங்களில்

 

மேலும் தற்போது சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அதிகம் பேர் மெட்ரோ ரயிலில்  பயணித்து வருகின்றனர். அவர்கள் கார்கள் மற்ற வாகனங்களில் வரும் போது, போக்குவரத்து நெரிசல்களில் சிக்கித் தவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் மெட்ரோ ரயிலில் வந்தால் அதைப் போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை. இதனால் விமான பயணிகள் பலர், வீடுகளில் இருந்து விமான நிலையத்திற்கு வருவதற்கு மெட்ரோ ரயில்லை தேர்ந்தெடுத்து உள்ளனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு  பகுதியில், பயணிகள் நெரிசலை குறைப்பதற்கு, மாற்று ஏற்பாடு செய்ய சென்னை விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி மெட்ரோ பயணிகள் அதிக அளவில் விமான நிலையத்துக்கு வருவதால், குறிப்பிட்ட முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களில், குறிப்பாக சென்னை கோயம்பேடு, உயர் நீதிமன்றம், அண்ணா சாலை, ஆலந்தூர், திரிசூலம் உள்ளிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில், விமான பயணிகளின் உடமைகளை, அந்த மெட்ரோ ரயில் நிலையங்களிலே  ஸ்கேன் செய்து பரிசோதித்து, போர்டிங் பாஸ் வழங்குவது பற்றி ஆலோசனை செய்தனர்.

 



 

இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை  நடந்தது. சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மெட்ரோ ரயில் அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், பிசிஏ எஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா ஏர்லைன்ஸ்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இது நல்ல ஒரு ஏற்பாடு, இதை சோதனை அடிப்படையில் முதலில் செயல்படுத்தி பார்க்கலாம், என்ற  ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது.



 

அந்த அடிப்படையில் வரும் 2023 மார்ச் மாதத்தில் இருந்து, சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில், இந்த புதிய திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. விமான பயணிகளின் செக்கின் பேக்கேஜ்களை, மெட்ரோ ரயில் நிலையத்தில் பரிசோதித்து, பயணிக்கு லக்கேஜ் செக்கின் சான்றிதழ், அந்தந்த விமான நிறுவனங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில்  வழங்குவார்கள். பயணிகள் தங்களுடைய  செக்கின் பேக்கேஜ்களை மெட்ரோ ரயில் நிலைய சோதனை இடத்திலேயே ஒப்படைத்துவிட்டு, அவர்கள் கைகளில் எடுத்து கொண்டு வரும் லக்கேஜ்களுடன், மெட்ரோ ரயில் பயணித்து, சென்னை விமான நிலையத்திற்கு வந்து விடலாம்.

 

கூட்ட நெரிசலை  தவிர்க்க முடியும்

 

இதனால் பயணிகள் லக்கேஜ்களை விமான நிலையத்திற்கு சுமந்து வரும் பணியும் குறையும். அதோடு சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில், பயணிகளின் உடைமைகளை பரிசோதித்து போர்டிங் பாஸ் வழங்கும் இடத்தில் கூட்ட நெரிசலை  தவிர்க்க முடியும் என்று முடிவெடுக்கப்பட்டது. எனவே அடுத்த சில தினங்களில் எந்தெந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தில் கொண்டுவரப்படுகிறது என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. அதோடு மார்ச் மாதம் அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில், விமான பயணிகளின், செக்கிங் லக்கேஜ்களை ஸ்கேன் செய்து பெற்றுக் கொள்ளும் புதிய முறை தொடங்கப்படுகிறது.2023 ஏப்ரல் 14 தேதி முதல், இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வரும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதோடு முதற்கட்டமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலும், இதை அடுத்து படிப்படியாக இந்த திட்டத்தை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கும் விரிவு படுத்தப்பட இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.