திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள மேல்சோழங்குப்பம், வீரளூர், கடலாடி, கீழ்பாலூர் உள்பட பல்வேறு கிராமங்களில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக காளை விடும் திருவிழா நடைபெற்றன. பொங்கலை முன்னிட்டு இன்று ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் காளை விடும் விழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு மாடுகளின் கொம்புகளில் விலை உயர்ந்த பட்டுசேலைகள், வெள்ளி, தங்க நகை ஆகியவைகள் அணிவித்து 30 அடி தொலைவுக்குள் பிடிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது.




 


இதில் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். பொங்கலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் 4 துணை காவல் கண்காணிப்பாளர், 6 ஆய்வாளர் தலைமையில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மாலை 2 மணி முதல் காளை விடும் விழா தொடங்கி 6 மணி வரை நடைப்பெறும். முன்னதாக நிகழ்ச்சியை தி.சரவணன் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ராஜா செய்திருந்தார்.


 




அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் வடமாமந்தல் கிராமத்தில் காணும் பண்டிகை ஒட்டி இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி எருது விடும் விழா என்று கூறி இன்று நான்கு,ஐந்து மாடுகளை விட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கோலமிட்டு கொண்டிருந்த 80 வயது மதிக்கத்தக்க எல்லம்மாள் என்கிற மூதாட்டியின் மீது மாடானது மோதி அம்முதாட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்துள்ளார்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 




இதனையெடுத்து அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு எந்த இடத்தில் காயம் என்பது குறித்து ஆராய்ந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனுமதியின்றி எருது விடும் விழா எனக்கூறி இளைஞர்கள் சிலர் செய்த இந்த செயலால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காளைவிடும் விழா, ஜல்லிக்கட்டு, உள்ளிட்ட போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் காளை விடும் திருவிழாவிற்கு அனுமதி அளிக்கவில்லை ஆனால் தடையை மீறி காளைவிடும் திராவிழா நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.