Kilambakkam Metro Project: "சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ அமைப்பதற்கான, நிலம் கையக்கப்படுத்தும் பணிகள் தொடங்கி இருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்"

Continues below advertisement

சென்னை மெட்ரோ ரயில் - Chennai Metro Rail Limited

தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னையில் பல்வேறு பொது போக்குவரத்து சேவைகள் இருக்கின்றன. ஆனால் மெட்ரோ ரயில் சேவை பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. குறிப்பிட்ட வழித்தடங்களில் தான் மெட்ரோ தற்போது இருந்தாலும், மெட்ரோ ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னை மெட்ரோவை பொறுத்தவரை, 2 வழித்தடங்களில் 55 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மேலும் 116 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - Kilambakkam Bus Terminus,Chennai

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்து, மெட்ரோ ரயில் சேவை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் சார்பில் வைக்கப்பட்டது. பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே, விரைவாக "கிளாம்பாக்கம் மெட்ரோ" அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

கிளாம்பாக்கம் மெட்ரோ - Kilambakkam Metro Station 

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கிளாம்பாக்கம் பேருந்து புதிய நிலையம் வரை சுமார் 15.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாக்கியது. இதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான, திட்ட அறிக்கை தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம், திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது. சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் அமைப்பதற்கு சுமார் 9,445 கோடி ரூபாய் செலவாகும் என, திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் மெட்ரோ நிலம் கையகப்படுத்தும் பணி - Kilambakkam Metro Land Acquisition 

கிளாம்பாக்கம் மெட்ரோ அமைப்பதற்கான திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தவுடன், மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. கிளாம்பாக்கம் மெட்ரோ அமைப்பதற்கான மத்திய அரசின் ஒப்புதலுக்காக சென்னை மெட்ரோ நிறுவனம் காத்திருக்கிறது.

இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நிலம் கையகப்படுத்துவதற்கான ஒப்புதலை தமிழக அரசு மெட்ரோ நிறுவனத்திற்கு வழங்கியது. மத்திய அரசு அனுமதிக்காக காத்திருக்கும் நிலையிலும், தற்போது மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மெட்ரோ அதிகாரிகள், நிலம் கையகப்படுத்தும் பணியை துவங்கியுள்ளனர்.

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை ரயில் நிலையங்கள் ? Metro Station Chennai Airport To Kilambakkam 

கிளாம்பக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி நகர், திரு.வி.க., நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கங்கரணை, வண்டலூர் ரயில் நிலையம், வண்டலூர் உயிரியல் பூங்கா இறுதியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் அமைய உள்ளது.