சென்னையில், முதல் முறையாக, குளிர்சாதன வசதி கொண்டு மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன் சேவை வரும் 11-ம் தேதியிலிருந்து தொடங்கும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Continues below advertisement


மாநகர போக்குவரத்துக் குழகம் சார்பில் 625 மின்சார பேருந்துகள்


சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 5 பணிமனைகளின் மூலம், 625 மின்சார பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.


அதில் முதல் கட்டமாக, சென்னை வியாசர்பாடி பணிமனையில் இருந்து, 120 மின்சார பேருந்துகளின் சேவையை கடந்த ஜூன் 30-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது, இரண்டாம் கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து மின்சார பேருந்துகளின் சேவை தொடங்கப்பட உள்ளது.


மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தகவலின்படி, பெரும்பாக்கம் பணிமனையில் இரந்து 55 குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளும், 80 சாதாரண மின்சார பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.


இந்த சேவை வரும் 11-ம் தேதி முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிற பணிமனைகளில் இருந்தும் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை


சுற்றுச் சூழல் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் செலவை குறைக்கும் வகையிலும், காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையிலும், டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதற்காக, உலக வங்கியின் உதவியுடன், மோத்த விலை ஒப்பந்தத்தில், 1,225 மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக, அசோக் லெலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்திடமிருந்து 625 பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.


இந்த தாழ்தளப் பேருந்துகளில், ஓட்டுநர் மற்றும் பயணிகளின் வசதிக்காக பல்வேறும் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 7 சிசிடிவி கேமராக்கள் இந்த பேருந்தில் பொருத்தப்பட்டுள்ளன.


மேலும், சீட் பெல்ட், அவசர கால பொத்தான்கள், சார்ஜிங் பாய்ண்ட்டுகள், அறிவிப்புகளை வெளியிடும் ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த தாழ்தள மின்சார பேருந்துகளில் இடம்பெற்றுள்ளன. தற்போது அதில் ஏசி மின்சார பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வருகின்றன.


இனி சென்னை மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்து, சத்தமில்லாமல், ஜாலியாக ஏசி மின்சார பேருந்துகளில் பயணிக்கலாம்.