சென்னை ஓட்டேரி சாலைமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (39). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் பழக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு குமாருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து ஓட்டேரி பிரிக்கிளின் சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குமாரை அவரது நண்பர்கள் அழைத்து சென்றனர். அங்கு குமாருக்கு குளுக்கோஸ் போட்டுள்ளனர். மேலும் ஊசியும் போட்டதாக கூறப்படுகிறது.
திடீரென்று குமாருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தனியார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்தார். இதனையடுத்து குமார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த குமாரின் நண்பர்கள் 5 க்கும் மேற்பட்டோர் ஓட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று இது குறித்து அங்கிருந்த மருத்துவர் வீரமணியிடம் கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த கண்ணாடி மற்றும் கார்களை அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குமாரின் உறவினர்கள் ஓட்டேரி துணை கமிஷனரிடம் இது குறித்து முறையிட்டனர். மேலும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கதறி அழுதனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை கமிஷனர் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர் தொடர்ந்து ஓட்டேரி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அடுத்த கட்ட நகர்வு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த பழைய குற்றவாளிகள் 2 பேர் கைது
சென்னை திரு.வி.க நகர் பல்லவன் சாலை பகுதியில் திரு.வி.க நகர் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரம்பூர் பகுதியில் இருந்து வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் இரண்டு அடி நீளமுள்ள கத்தி மற்றும் பூட்டுக்களை திறக்க பயன்படுத்தப்படும் கட்டர் எனப்படும் கருவி உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.
இதனை அடுத்து சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் ஒருவர் புளியந்தோப்பு ஆடுதொட்டி ஏழாவது பள்ளத்தெரு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்கின்ற பெண்டு சூர்யா (20 என்பதும் இவர் மீது மாதவரம் , அயனாவரம் கண்ணகி நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மற்றொரு நபர் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்த மோகன் (19) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் மூலக்கடை செல்வதற்காக ஆட்டோவில் சவாரி ஏறி சென்றபோது போலீசாரிடம் பிடிபட்டனர்.
போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட சூர்யா என்பவரின் தம்பியான மோகன் என்பவர் கொடுங்கையூரில் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதும் , அதற்காக இவர்கள் இருவரும் கத்தியுடன் பஞ்சாயத்து செய்ய சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த திரு.வி.க நகர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.